இயக்கம் – ஜி.சீனிவாசன்
ஒளிப்பதிவு – தில்ராஜ்
வகை – ஆக்ஷன் – டிராமா, ஃபேமிலி
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 9 நிமிடங்கள்
RATING : 3/5
காதலி இறந்த துக்கத்தில் குடியே கதியென்று கிடக்கும் ஹீரோவின் வாழ்க்கையில் அதே குடியால் நடக்கிற எதிர்பாராத சம்பவங்கள் தான் இந்த ‘அண்ணாதுரை.’
அண்ணாதுரையும், தம்பிதுரையும் இரட்டைப் பிறவிகள். அமைதியே உருவான தம்பி விஜய் ஆண்டனி பள்ளிக்கூடத்தில் பொறுப்பான உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்கிறார்.
காதலியை இழந்த துக்கத்தில் அவளது நினைப்பிலேயே சதா எந்த நேரமும் குடித்து விட்டு அவளின் கல்லரையிலேயே படுத்துக் கிடக்கிறார் அண்ணன் விஜய் ஆண்டனி.
குடிகாரனாக இருந்தாலும் அவருடைய நல்ல மனசைப் பார்த்து அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் அழகு நிலையம் நடத்தும் ஜூவல் மேரி.
தன் குடும்பத்தினர் சந்தோஷத்துக்காக தன்னை விரும்புகிற ஜூவல் மேரியையே திருமணம் செய்ய முடிவு செய்து இன்றே கடைசி, இனிமேல் குடிக்கக் கூடாது என்று ஒயின்ஷாப்புக்கு குடிக்கச் செல்கிறார்.
அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவத்தால் சிறைக்கு செல்ல நேர்கிறது. இதனால் தம்பி விஜய் ஆண்டனியின் திருமணம் தடை பட, அப்பாவின் ஜவுளிக்கடையை வில்லன் கோஷ்டி பிடுங்கிக் கொள்ள, எந்தக் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாரோ அந்தக் குடும்பம் மொத்தமாக சிதைந்து விடுகிறது. சிறை வாசம் முடிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பும் அண்ணன் விஜய் ஆண்டனி கண் முன்னே தம்பி விஜய் ஆண்டனி ஒரு ரவுடியாக மாறி நிற்கிறார்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் அண்ணன் விஜய் ஆண்டனி மீண்டும் தன் தம்பி மற்றும் அம்மா, அப்பாவின் சந்தோஷத்துக்காக முடிவொன்றை எடுக்கிறார்? அது என்ன என்பதே மீதிக்கதை.
தனக்கு அதிகபட்சமாக என்ன வருமோ அந்த மாதிரியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதில் தெளிவாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்தத் தெளிவு இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது. அண்ணன் – தம்பி கேரக்டர்களை அவரே ஏற்று நடித்திருக்கிறார். தோற்றத்திலும், அமைதியான முகபாவங்களில் வழக்கம் போல எந்த மாற்றமும் இல்லை என்றாலும் இரட்டை கேரக்டர்களிலும் பவர்புல்லான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டான்ஸ், ரொமான்ஸ் காட்சிகளில் பதட்டப்படுகிறவர், சண்டைக்காட்சிகளில் ஒரு மாஸ் ஹீரோ லெவலுக்கு முன்னேறியிருக்கிறார்.
மூன்று நாயகிகளில் ஒருவராக வரும் டயானா சம்பிகா ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என்றிருந்தாலும் புதுமுகம் என்று தெரியாதபடி நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். அண்ணன் விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிக்கும் ஜூவல் மேரி, மஹிமா இருவரும் வந்து போவது சில காட்சிகளில் என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.
நாயகி டயானா சம்பிகாவின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன் மற்ற கேரக்டர்களை விட நெகிழ வைக்கும் நடிப்பில் கண்கலங்க வைத்து கைதட்டல்களை அள்ளுகிறார். தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல குணச்சித்திர நடிகர் ரெடி!
நண்பராக வரும் காளி வெங்கட், அப்பா நளினி காந்த், அம்மா ரிந்து ரவி, அரசியல்வாதி ராதாரவி, ஜவுளிக்கடையை அபகரிக்கும் வில்லன் சேரன்ராஜ், மொட்டை வில்லன் ராஜாகுமார் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.
பின்னணி இசையிலும் ‘தங்கமா வைரமா’, ‘ஜி.எஸ்.டி’ என பாடல்களிலும் வழக்கம் போல முத்திரை பதித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஜி.எஸ்.டி பாடலில் வருகிற விஷுவல் எஃபெக்ட்ஸ் கலர்புல் கலக்கல்.
படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது தில் ராஜின் ஒளிப்பதிவு. இந்தப் படத்தில் எடிட்டராகவும் மாறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. இரண்டாம் பாதியில் படம் பார்க்கிறவர்களை குழப்புகிற அண்ணன், தம்பி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், மெதுவாக நகர்கிற சில காட்சிகளிலும் இன்னும் ஷார்ப்பாக கத்தரி போட்டிருக்கலாம்.
”இந்த ஊருக்கு பழி சொல்லத் தெரியும் வழி சொல்லத் தெரியாது” ”தலைவனுக்கும், அடியாளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான், தலைவனுக்காக அடிச்சா அவன் அடியாள், தலைவன் ஆகிறதுக்காக அடிச்சா அவன் தலைவன்” என படத்தில் ஆங்காங்கே வருகிற தீப்பொறி பறக்கும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.
அண்ணன் – தம்பி, ஆள் மாறாட்டம், காதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்ஷன் என தமிழ்சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட் தான் இந்தப்படம். அதற்குள் ‘குடி’யினால் ஏற்படும் தீமையை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார். மெதுவாக நகரும் காட்சிகளினால் ஏற்படும் எரிச்சலை தவிர்க்க கொஞ்சம் காமெடியையும் சேர்த்திருக்கலாம்.
அண்ணனும், தம்பியும் கிளைமாக்ஸில் சண்டை போட்டுக் கொள்வது, வில்லனிடம் சண்டை போட்டு தம்பியை அண்ணன் மீட்பது, அண்ணனும், தம்பியும் கை கோர்த்துக் கொண்டு கிளைமாக்ஸில் வில்லன் கோஷ்டியை புரட்டியெடுப்பது என தமிழ்சினிமாவில் நாம் பார்க்கும் வழக்கமான க்ளிஷேக்கள் இல்லாமல் படத்தை தந்ததற்காகவே இயக்குனர் ஜி.சீவாசனை பாராட்டி வரவேற்கலாம்.