அறம் – விமர்சனம்

RATING : 4.5/5

நட்சத்திரங்கள் – நயன் தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனு லட்சுமி, ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் பலர்

இயக்கம் – கோபி நயினார்

வகை – டிராமா

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

கால அளவு – 2 மணி நேரம்

ண் முன்னே நடக்கும் கொடுமை கண்டு நீயும் சினம் கொண்டால் அதுவே சிறந்த ‘அறம்.’

உண்மையை நேர்மையாகவும், துணிச்சலோடும் பேசுவதே மனிதம். அந்த மனிதத்தை எளிய மக்களின் வாழ்வியலோடு பிண்ணி மொத்தப் படத்தையும் அரசுக்கு எதிரான சாட்டையாகச் சுழற்றியடித்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

அடித்தட்டு மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்திய விதம், அதைவிட இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில் தண்ணீரை பாதுகாப்பதற்கான போராட்டத்தை இளைய தலைமுறை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்கிற நிஜத்தையும் உரைத்திருக்கிறார்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அவர்கள் கொடுக்கிற கமிஷன் காசுக்கு ஆசைப்பட்டு இயற்கை வளங்களை காவு கொடுக்கிற அரசையும், அதை இயக்குகிற அரசியல்வாதிகளையும், அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு சாமி மாடு போல தலையாட்டுகிற லஞ்சத்தில் ஊறித்திளைக்கிற அதிகாரிகளையும் தடம் ஆழப்பதிய ‘பொளேரென்று’ அறைந்திருக்கும் படம் தான் தமிழ்சினிமாவின் பெருமைமிகு படைப்பாக வந்திருக்கும் இந்த ‘அறம்.’

மூடாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் மாட்டிக்கொள்ளும் பெண் குழந்தையை உயிரோடு காப்பாற்ற அம்மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டரான நயன்தாரா சந்திக்கும் போராட்டமே படத்தின் மையக்கரு. இப்படி படம் என்னவோ இரண்டு மணி நேரத்துக்குள் ஓடும் இருவரிக்கதை தான். ஆனால் படம் முடிந்து வெளியே வந்தவுடன் நம்மை பல மணி நேரம் வரிக்கு வரி சிலாகித்து பேச வைக்கிறது.

 தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழலுக்கு ஆட்பட்ட அரசு பாராமுகம் காட்டும் பசுமையைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்ட ஒரு கிராமம். அங்கு கூலி வேலைக்காக காட்டுக்குள் கிராமத்தைச் சேர்ந்த பெண்களோடு தன் பெண் குழந்தையையும் கூட்டிச் செல்கிறார் சுனு லட்சுமி.

வானம் பார்த்த பூமியாகி மடலாகிக் கிடக்கும் அந்த பரந்த மணற்பரப்பில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று ஆழ் துளை கிணற்றுக் குழி ஒன்றில் தவறி விழுந்து விடுகிறது. அவ்வளவு தான். ஒட்டுமொத்த ஊரே நெஞ்சில் அடித்துக் கொண்டு அங்கு குவிகிறது.

தகவல் அந்த மாவட்டத்தின் கலெக்டரான நயன்தாராவுக்கு செல்ல. அடுத்த நொடி பதறியடித்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு விரைகிறார்.

காலையில் விழுந்த குழந்தை இரவு எட்டு மணி தாண்டியும் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? என்பதே நம் உடலை நடுங்கச் செய்யும் திக் திக் நிமிடங்கள்…

டிஜிட்டல் இந்தியாவுக்கு மக்களை மாறச் சொல்கிறது அரசு. விண்வெளிக்கு ராக்கெட் விட்டு பெருமைபட்டுக் கொள்கிறார்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் இந்திய விஞ்ஞானிகள். அந்த ஸ்ரீ ஹரி கோட்டாவுக்கு சில கிலோ மீட்டர்களுக்குள்ளேயே தான் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடிகள் ஆழத்துக்கு வற்றிப் போய் வானம் பார்த்த பூமியாக ஒரு கிராமம் என்று காட்சிப்படுத்துகிற போது அதிர்கிறோம்.

93 அடி குழிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற நூல் கயிறே இந்திய விஞ்ஞானிகளில் அதிகப்பட்ச கண்டுபிடிப்பு என்கிற உண்மையை படம் உடைத்துச் சொல்கிற போது விண்வெளிக்கு ராக்கெட் விட்டு பக்கத்து நாடுகளிடம் பவுசு காட்டுவதெல்லாம் இந்த அரசுக்கு ஒரு கேடா? என்கிற காட்டமான கேள்வி தான் எழுகிறது.

ஒரு பெண் ஆளுமையாக படம் முழுக்க கம்பீர ஆட்சி செய்கிறார் நயன்தாரா. எல்லா பலமும் கொண்ட அரசும் கை விட்ட நிலையில் தன் அதிகார ஆடையை கழட்டி வைத்து விட்டு மக்களில் ஒருவராக மாறி எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்று நம்பிக்கையின் கடைசி எல்லை வரை செல்வதும் அதற்காக துணிந்து குழிக்குள் மாட்டிக் கொண்ட சிறுமியைக் காப்பாற்ற அவளது அண்ணனையே கருவியாக அனுப்புகிற முடிவை எடுக்கிற தருணமும் நம்மை எங்குமே தலை திரும்ப வைக்காத தருணம்.

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை சிறுமியைப் பார்த்ததும் முகம் மூடிப்பொத்திக் கொண்டு ஒரு ஓரமாக நின்று நயன்தாரா அழுகிற போது அவர் கூடவே சேர்ந்து நாமும் அழுகிறோம்.

கலெக்டர் பதவியை தானாக முன் வந்து ராஜினாமா செய்ய வரும் நயன்தாராவிடம் மேலதிகாரியான கிட்டி விசாரணை செய்கிற காட்சிகளில்

”மக்கள் தான் அரசாங்கம்னு நான் நெனைக்கிறேன்.”

”ஒரு அடிமை எப்படி சார் இன்னொரு அடிமைக்கிட்ட வேலை செய்ய முடியும்.”

”மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசு கொடுக்கணும். அதை விட்டுட்டு சட்டத்தை போட்டுட்டு அதுக்குள்ள மக்களை அடக்கக் கூடாது.”

”ஒரு உயிரோட விளையாடுறோம்கிற எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாத அதிகாரிகள் இருக்கிற வரைக்கும் இந்த நாடு எங்க உருப்படப் போகுது?”

என பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றிலும் உண்மையும், நியாயமும் வெடித்துத் தெறிக்கிறது. அப்போதெல்லாம் தியேட்டர் கை தட்டல்களில் அதிர்ந்து குலுங்குகிறது.

சிறுமியின் அம்மாவாக வரும் சுனு லட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் விக்னேஷ் – ரமேஷ், பழனி பட்டாளம், அந்த 60 வயதைத் தாண்டிய பெரியவர் என படத்தில் வருகிற அத்தனை பேரும் தங்களை ஆளுகிற அரசையும், அதை இயக்குகிற அரசியல்வாதிகளையும் நோக்கி எழுப்பும் கேள்விகள் நாக்கை பிடுங்கிக் கொள்ள வைப்பவை.

”இந்தா குழிக்குள்ள மாட்டுன குழந்தைக் காப்பாத்த புதுசா கண்டுபிடிச்சுக் கொண்டு வந்துட்டாங்கய்யா… பெரிய கண்டுபிடிப்பு. த்தூ… ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை, இதெல்லாம் ஒரு அரசு” என்று பழனி பட்டாளம் கொந்தளித்துப் பேசுகிற வசனத்தில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

நிஜமாகவே 100 அடி ஆளமுள்ள குழிக்குள் விழுந்திருப்பாரோ என்று நம்மை பதற வைப்பது போல அந்த உடல் மொழிகளை மிக எளிமையாகவும், அழகாகவும் திரையில் கொண்டு வந்து நம்மையும் சேர்த்து மூச்சு முட்ட வைத்திருக்கிறாள் சிறுமி தன்ஷிகா.

”அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதும்மா…” ”ஒரே இருட்டா இருக்கு… ”பயமா இருக்கும்மா…” என்று குழந்தை வெளிப்படுத்துகிற பசி உணர்வும், பய உணர்வும் நம் மனசாட்சியை உலுக்கி எடுப்பவை.

கூலிப்படையில் ஒரு ஆளாக, கொடூர வில்லனாக, கஞ்சா விற்பவராக என பல படங்களில் நெகட்டீவ் முகம் மட்டுமே காட்டிய ராமச்சந்திரன் இந்தப் படத்தில் ஒரு எளிய குடும்பத்தின் தலைவனாக காட்சி தருகிறார். நடிப்பிலும், மகளைக் காப்பாற்ற பதறித் துடிக்கிற போது உடைந்த குரலுமாய் பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார்.

வறுமைத் தாண்டவமாடும் கிராமம், அதைச் சுற்றியுள்ள வறட்சி என படம் முழுக்க ஒரேவிதமான கலர் டோனை கேமராவில் கொண்டு வந்து பிரமாதப்படுத்தியிருக்கிறது ஓம் பிரகாஷின் பிரகாசமான ஒளிப்பதிவு.

நல்ல கருத்துகளுடன் கூடிய பாடல்கள் படத்தில் இரண்டே இரண்டு தான். காட்சிகளோடு ஒன்றிப் போய் அந்தக் கிராமத்தில் நம்மையே வாழச் செய்த உணர்வை புல்லரிக்க வைக்கும் விதமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான்.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் மச்சான் செம மொக்கைடா என்று சொல்ல கையில் செல்போனை எடுக்க நினைக்கும் இளவட்டக் கூட்டங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் அதையெல்லாம் மறந்தே விடுவார்கள். அந்தளவுக்கு அதை மறக்கடித்து படத்தோடு ஒன்றிப் போய் ஒரு காட்சியையும் தவற விட்டுவிடக் கூடாது என்கிற ஈர்ப்பைத் தருகிற படைப்பை சமூகப் பிரச்சனையோடு கையாண்ட விதத்தில் தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் கோபி நயினார்.

உலக சினிமாக்களைக் கொண்டாடுகிற ஒவ்வொரு உண்மையான தமிழ் சினிமா ரசிகனும் அதற்கு இம்மியளவும் சளைக்காத வகையில் வந்திருக்கும் இந்த ‘அறம்’ படத்தை பார்த்தே தீர வேண்டும்.

இது வேண்டுகோள் இல்லை.

‘கட்டளை’

ArammAramm Movie ReviewAramm ReviewGhibranGopi NainarMovie ReviewNayantharaOm PrakashP.V.AnandakrishnanRamachandran DurairajRameshSunu LakshmiVigneshVinodhini Vaidyanathan
Comments (0)
Add Comment