கேங்பேங் பட பிரஸ்மீட்டில் கண்ணன் ரவி பற்ற வைத்த நெருப்பு

 

நேற்று நடைபெற்ற கேங்பேங் படத்தின் அறிமுகவிழாவில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசியவவை அனைத்தும் சோசியல் மீடியாவின் வைரன் கன்டென்ட்! குறிப்பாக தனது மகன் கல்யாணச் சடங்குகள் குறித்து அவர் பேசிய கருத்து பெரும் பேசுபொருளானது
அவையனைத்தும் யூட்யூபில் இருக்கிறது. தற்போது படம் குறித்து அவர் பேசியவை கீழே

”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களை என் சொந்த ஊரில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், மக்களுடனும் கொண்டாடுவது வழக்கம். என் ஊரைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு விசேஷ நாட்களில் உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துவதுண்டு.

சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்காகச் செலவழித்திட வேண்டும். அப்படிச் செலவழிக்கவில்லை என்றால், அந்தக் குறிப்பிட்ட பணம் தானாகச் சென்றுவிடும் எனும் எண்ணம் கொண்டவன் நான். அதனால்தான் இன்று வரை நான் சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மக்களுக்காகச் செலவழித்து வருகிறேன்.

பிரபுதேவா என்னைச் சந்தித்து, ‘ஒரு புது இயக்குநர், ஜாம்பி கதை… கதையைக் கேட்டு வாய்ப்பு தாருங்கள்’ என்று சொன்னார். அந்தக் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்ட பிறகு இயக்குநர் சாம் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுவார் என நம்பினேன். அவர் புது இயக்குநராக இருந்தாலும், அவருக்கான குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வடிவேலு – பிரபுதேவா ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல், அனைத்து விஷயங்களிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் நிச்சயமாகப் பேசப்படும்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை இந்தோனேசியாவில் நடத்தலாம் என்ற ஆலோசனையை நான்தான் முதலில் முன்வைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காத அந்தத் தீவில் உள்ள எரிமலை, படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தபோது வெடித்தது. அதனையும் படக்குழு படமாக்கியுள்ளது. நானும் எரிமலையைப் போலத்தான். எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன். ஏனெனில், நானும் கோபம் – அன்பு – பாசம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட சாதாரண மனிதன்தான்.

இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள். இவர்கள் அனைவரும் படத்தில் தான் சண்டை போட்டார்களே தவிர, படப்பிடிப்புத் தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஜாம்பி கதையாக இருந்தாலும், அந்தக் கதையை முழுமையாகக் கேட்டபின், டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் கோணத்திலிருந்து சில விஷயங்களைச் சொல்லி, சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று சொன்னேன். இயக்குநரும், படக்குழுவினரும் அதை ஏற்றுக்கொண்டு நல்லதொரு படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படம் தான் உண்மையிலேயே கூட்டுத் தயாரிப்பு. படம் நன்றாக இருக்கிறது” என்றார்.

Actor PrabudevaBang bang movie