‘பீப் சாங்’ பற்றி பல அமைப்புகள் கொதித்துப் போய் சிம்பு – அனிருத்துக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆங்காங்கே வழக்குகளை போட்டுத் தள்ள, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நடிகர் சங்கமோ சைலண்ட்டாக இருந்தது.
சும்மா இருப்பாரா? முன்னாள் தலைவர் சரத்குமார்? சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் நிலைப்பாடு என்ன என்று கேட்டே விட்டார்.
இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் அது சரியானதாக இருக்காது என்று முடிவு செய்த நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று இரவோடு இரவாக மீடியாக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.
அதில் சிம்புவை அவர்கள் கண்டிப்பதோடு ஏன் சைலண்ட்டாக இருந்தோம் என்பதற்கும் பதில் கொடுத்திருக்கிறார்கள்.
”அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகி இருக்கும் பாடலில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது.
ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிற போது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது. அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக் கூடாது என்றும் எங்கள் கருத்தாக இருந்தது.
வருகின்ற 26-ம் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி நிறுவனக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுபட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் ‘பீப்’ பாடல் என்கிற நிகழ்வு சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக்கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது” என்று விளக்கம் கொடுத்திருக்கிறது நடிகர் சங்கம்.