கவனம் ஈர்க்கும் கதைகளை கமர்சியல் அம்சங்களோடு தருவதில் சேட்டன்கள் வல்லவர்கள். பகத்பாசில் தயாரிப்பில் நிவின்பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லெஹேம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத்தில் 10 நாட்களுக்கு முன் வெளியாக சக்கைப் போடு போட்டுவருகிறது. இத்திரைப்படம் நாளைமுதல் தமிழ் பேசவிருக்கிறது. இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்
தயாரிப்பாளர் பஹத் பாசில். அவர் பேசுகையில்,
”படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.