‘மண்ணைக் காக்க போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்’ – பட விழாவில் பாரதிராஜா பேச்சு

முத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக சமுத்திரகனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய பாரதிராஜா, ”பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ? என்று தோன்றும்.

ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமூக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூக விரோதி என்றார் இயக்குநர் பாரதிராஜா இந்தப்படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிடவும் அவர் தவறவில்லை.

இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு. பாட்டே இப்படி இருக்கும் போது படம் எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அற்புதமாகவே இருக்கும்னு சொல்வேன்.

இந்த படத்துல நடிச்ச ஹீரோ அப்படியே மண்வாசனை முகம். தமிழன் இப்படித்தான் இருப்பான். என் படத்து ஹீரோக்கள் எல்லோருமே நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற முகமாத் தான் இருப்பாங்க. மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏதாவது நல்ல விஷயத்தை பேசினாலே சமூக விரோதியாக்கப்பட்டு விடுகிறார்கள். இந்த இயக்குனர் பெட்டிக்கடை- வித் அவுட் ஜி.எஸ்.டி என்று வைத்திருக்கிறார். இவருக்கும் பிரச்சனை வரலாம். போராடித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம். தமிழை இழந்து விடுவோம். நம் மண்ணை இழந்து விடுவோம். ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம்.” என்றார்.

Audio LaunchBharathirajaPettikkadai
Comments (0)
Add Comment