கதாநாயகி இல்லாத படத்தில் ஏழு பாடல்கள்!

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’.

முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இப்படத்தின் இயக்குனர் பிஜூ.

படம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.

”நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போது தான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.

நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்? என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும்? அதில் உள்ள காமெடியும்தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பது கிளைமாக்ஸ்.

ஒளியின் பயண வேகம் மணிக்கு பல லட்சம் கிலோ மீட்டர் என்று சொல்லுவார்கள். அந்த வேகத்தில் பயணித்தால் கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதுமட்டுமன்றி ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோதும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக உருவானது தான் இந்தக் கதை.

மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா..? சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள்..

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை..ஒரு பாடகர் இருப்பதால் ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும்.

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.. இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதிக்கு நன்கு தெரியும்..

இந்தபடம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டு பணிகளில் மிகுந்த உதவியாக இருந்து வருகிறார். ஒரு சீனில் கூட விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஆடியோ வெளியாகி உள்ளது. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது” என்றார் இயக்குநர் பிஜூ .

Chennai Palani MarsMovie News
Comments (0)
Add Comment