சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய்யின் ‘தெறி’, ரஜினியின் ‘கபாலி’ இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
சமீபகாலமாக விஜய் படம் ரிலீசானால் எப்படி அரசியல் ரீதியாக குடைச்சல் வருகிறதோ? அப்படித்தான் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கும் குடைச்சல் வரும் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஆனால் இரண்டு படங்களையும் தயாரித்து வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ”குடைச்சல் வருகிற அளவுக்கு இரண்டு படங்களிலும் எந்த ‘பொலிட்டிகள் பில்டப்புகளும்’ இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அதோடு ‘தெறி’ ரிலீசுக்கும் ஏப்ரல் 14-ம் தேதியை குறித்து விட்டார்.
தேர்தல் முடிந்த பிறகு ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் ரிலீசாகிறது. அதற்கு காரணம் தேர்தல் அல்ல, ‘தெறி’ படம் முதலில் ரிலீசாவதால்!
சரி இவர்கள் இருவருக்கும் அரசியல் ரீதியாக பிரச்சனை வருமென்று நினைப்பதில் கூட ஒரு விதத்தில் நியாயமிருக்கிறது.
ஆனால் தனுஷ் நடித்த ‘ரயில்’, ‘கொடி’ இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்தும் ரிலீஸ் தள்ளிப்போனது தான் அவருக்கும் அப்படிப்பட்ட நெருக்கடிகள் வருமோ? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டிருக்கிறது.
சந்தேகம் தனுஷ் காதுகளை எட்டவும் ”எலெக்ஷன் வருதுல்ல… சரி வரட்டும்” என்கிறார் சிரித்துக் கொண்டே…
ஸ்கூல் எக்ஸாம்ஸ், அப்புறம் எலெக்ஷன் பரபரப்பு இரண்டுமே அடங்கினால் தான் படத்தோட வசூல் சூப்பரா இருக்கும். அதை யோசிச்சித் தான் கொடி, ரயில் ரெண்டு படங்களோட ரிலீசையும் மே மாசத்துக்கு தள்ளி வெச்சிருக்கோம். மத்தபடி நமக்கும் எலெக்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? என்கிறார் அசராமல்.
அதானே தனுஷுக்கும் எலெக்ஷன் நெருக்கடிக்கும் என்ன சம்பந்தம்? யாருப்பா இப்படியெல்லாம் கெளப்பி விடுறது?