விருதுகளுக்காக படம் தயாரிக்கிறேனா? : தனுஷ் மனம் திறந்த பேச்சு!

ணம் சம்பாதிப்பதற்காக கமர்ஷியல் படங்களை மட்டுமே தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு நல்ல ரசனையைத் தர வேண்டுமென்கிற சிந்தனையோடு நல்ல கதையம்சமுள்ள படங்களை கொஞ்சம் கமர்ஷியலும் கலந்து தயாரிப்பதாலோ என்னவோ படத்துக்கு விருதுகளும் குவிகின்றன. கமர்ஷியலாகவும் படம் ஹிட்டாகி விடுகின்றன.

தனுஷ் தயாரித்த காக்கா முட்டை, விசாரணை இந்த இரண்டு படங்களும் அதற்கு சிறந்த உதாரணங்கள். அந்த வரிசையில் தனுஷ் தயாரித்திருக்கும் மற்றுமொரு வித்தியாசமான படம் தான் ‘அம்மா கணக்கு’.

ஹிந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற ‘நில் பேட்டா சனாட்டா’ என்கிற படத்தின் ரீமேக் தான் இந்தப்படம்.

அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி, சிறுமி யுவா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி என்பவரே தமிழிலும் ‘அம்மா கணக்கை’ இயக்கியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் பேசினார்.

அவர் பேசும் போது,

”நாங்கள் தயாரித்த ‘காக்கா முட்டை,’ ,’விசாரணை’ போன்ற படங்களுக்கெல்லாம் விருதுகள் கிடைத்து பாராட்டப்படுவது கடவுள் அருளால் தானாக அமைவது தான். நாங்கள் திட்டமிட்டு விருதுகளுக்காகப் படமெடுப்பதில்லை. இந்த ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்ததில் வுண்டர்பார் பிலிம்ஸ் பெருமைப்படுகிறது. ஏனென்றால் இது சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்லியிருக்கும் படம்.

பலருக்கும் படிக்கும் போது கணக்குப்பாடம் கடினமாகத் தெரிகிறது. ஏன்? நான் கூட ப்ளஸ்டூவில் கணக்கில் பெயிலானவன் தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அவர்கள் படிப்பின் மீது ஒரு கனவுடன் கவலையுடன் இருக்கிறார்கள்.ஆனால் பிள்ளைகளுக்கோ படி படி என்றால் பிடிப்பதில்லை. ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை. இந்தப் படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இருக்கும்.

இந்தஹிந்திப் படத்தை பார்க்காமலேயே வெறும் ட்ரெய்லரைப் பார்த்தே ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆனந்த் எல்.ராயிடம் கேட்டேன். அப்படியே ரீமேக் உரிமையையும் வாங்கினேன். உரிமை வாங்கிய பிறகுதான் படத்தையே பார்த்தேன். எனக்கு அந்த ட்ரெய்லரே அந்த அளவுக்கு தூண்டுதலாக இருந்தது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம் கனவு பற்றிச் சொல்கிற படம்.இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து அசத்திவிட்டார்.

இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா சார் இசையமைத்துள்ளார். அவரது இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். படத்துக்கு ஒளிப்பதிவு ஆரி செய்திருக்கிறார். அவர் ‘ஜிகர்தண்டா’ ஒளிப்பதிவாளர்.படத்தை நல்லமுறையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்துக்கு ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

படத்தில் நடித்த பிறகு தன் நடிப்பைப் பற்றி என் அபிப்பிராயத்தை அறிய அமலாபால் மிகவும் ஆவலாக இருந்தார். தன் நடிப்பைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். அமலாபாலின் க்ளோஸ்அப் காட்சிகளுக்கெல்லாம் இசைஞானி இசையமைத்திருக்கிறார். இதை விட சிறப்பு என்ன வேண்டும்? இப்போது சொல்கிறேன், அமலாபால் ஏற்றிருக்கிற பாத்திரம் மிகவும் சிறப்பானது.
அவர் நடித்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்வேன். இப்படத்தின் மூலம் அமலாபாலுக்கும் சுட்டிப்பெண் யுவாவுக்கும் தேசிய விருது கிடைக்கும்” இவ்வாறு தனுஷ் பேசினார்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி பேசும்போது, ”தமிழில் படம் இயக்கும் இந்த வாய்ப்பு எனக்கு ஒளிப்பதிவாளர் ஆரியால் கிடைத்தது என்பேன். தமிழில் என்னை அறிமுகம் செய்துள்ள வுண்டர் பார் பிலிம்சுக்கும் தனுஷ்சாருக்கும் நன்றி.” என்றார்

நடிகை அமலாபால் பேசும்போது ”முதலில் தனுஷ்சார் இந்தப்படம் பற்றிச் சொன்னார். அம்மாவாக நடிக்க வேண்டும் நல்ல கதை என்றார். ஏதோ சிறு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று ஓகே சொன்னேன். பிறகு பத்தாவது படிக்கும் ஒரு பெண் குழந்தைக்கு. அம்மாவாக நடிக்க வேண்டும் என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. படத்தை பாருங்கள் என்றார். பார்த்தேன். அந்தப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்தேன். இந்தப் படப்பிடிப்பு அனுபவம் சுற்றுலா சென்று வந்தது போல மகிழ்ச்சியான அனுபவமாக இருந்த்து.” என்றார்.

நிகழ்ச்சியில் வுண்டர்பார் பிலிம்ஸ் முதன்மை நிர்வாகி வினோத்குமார், ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி ,சிறுமி யுவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Amala PaulAmma KanakkuDhanushDhanush SpeechIlayarajaஅமலாபால்அம்மா கணக்குஇளையராஜாதனுஷ்
Comments (0)
Add Comment