பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’ . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் .யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார்.ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். ‘கிராண்மா’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்., தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகை சோனியா அகர்வால் பேசும்போது,
“இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி அவர்கள் அப்படி வைத்துள்ளார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது பல கதாநாயகர்களுடன் நடித்துள்ளேன். இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்தது. இதை ஏற்றுக் கொண்டு நடித்தேன். தமிழில் இடையில் சிலகாலம் நடிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெப் சீரியல்களில் நடித்தேன்.
என்னுடன் இதே படத்தில் விமலா ராமன், சார்மிளா நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சௌகரியமாக இருந்தது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.பிரபல கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அது ஒரு ரகம் இது ஒரு ரகம் அவ்வளவுதான். பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுமாதிரி பெண்ணைப் பிரதானப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும்.நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.இந்தப் படத்துக்காக இயக்குநர் சொன்ன கதையும் என் பாத்திரமும் பிடித்திருந்தது எனவே ஒப்புக்கொண்டேன்.