‘தாரை தப்பட்டை’ பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை! : ‘இசைஞானி’க்கு இப்படியும் ஒரு தம்பி!

‘63′-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியிருந்தே சர்ச்சைகளும் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

‘ஐ’ படத்துக்காக உசுரக் கொடுத்து நடிச்ச விக்ரமுக்கு விருது கொடுக்கவில்லை. இது அநியாயம் என்று பொங்கினார்கள் அவரது ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும்!

அதேபோல ‘தாரை தப்பட்டை’ படத்தில் கரகாட்டக்காரியாக நடித்த வரலட்சுமிக்கும் சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்படாதது ஏமாற்றமே என்றும் ரசிகர்கள் தேசிய விருதுக் குழுவை திட்டித் தீர்த்தனர்.

ஆனால் அதே ‘தாரை தப்பட்டை’ படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ‘இசைஞானி’ இளையரஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

‘இசைஞானி’க்கு கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான் என்றாலும் தேசிய விருது தேர்வுக்குழுவில் இருக்கும் அவரது தம்பி கங்கை அமரன் தான் இந்த ”கொடுக்கல் வேலை”யை செய்திருக்கலாம் என்கிற விமர்சனங்கள் பரவலாக எழ ஆரம்பித்து விட்டது.

அந்தப்படம் எந்த வகையிலும் ரசிகர்களை ஈர்க்காமல் தோல்விப் படமாகி விட்ட அதன் பின்னணி இசை மட்டும் எப்படி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது என்பது தான் பலருடைய கேள்வி?

இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்.

அவருடைய கருத்தைப் படியுங்கள்…

”’தாரை தப்பட்டை’ படத்தின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எதுவுமே சிச்சிவேஷனுக்கு பொருந்தவில்லை. ”பாருருவாயா” பாடல் எதற்கு அந்த இடத்தில் வந்தது என்றே தெரியவில்லை ‘

“தேசிய விருதுப் பட்டியலில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தனர். ‘தாரை தப்பட்டை’யை நான் பரிந்துரைக்கவில்லை. படம் நாட்டுப்புறக் கலைஞர்களை பற்றியது என்பதையும் படத்தின் இசைக்கோர்வைகள் எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்ட்கள் அல்லாமல் கலைஞர்களால் வாசிக்கப்பட்டது என்பதையும் மட்டும் சொன்னேன்.

பிறகு படத்தை பார்த்த சக குழு உறுப்பினர்கள் பட்டியலில் இருந்த மற்ற படங்களைக் கூட பார்க்காமல் உடனே ‘தாரை தப்பட்டை’யை தேசிய விருதுக்கு தேர்வு செய்தனர். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது” என்று கூறிருக்கிறார்.

உலகமே ‘இசைஞானி’யின் பாடல்களை சிலாகித்து ரசித்துக் கொண்டிருக்க, அவரது தம்பி கங்கை அமரனோ ‘தாரை தப்பட்டை’ படப்பாடல்கள் என்னை கவரவில்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் மற்ற படங்களை பார்க்காமலேயே ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக இளையராஜாவுக்கு விருது கொடுத்து விட்டார்கள் என்று வெளிப்படையாக கூறியிருப்பது ‘இசைஞானி’யின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் மன வருத்தத்தை தந்திருக்கிறது.

உலகமே வியக்கும் ‘இசைஞானி’க்கு இப்படியும் ஒரு தம்பி! ஹையோ… ஹையோ…

Gangai AmaranIlayarajaTharai Thappattaiஇளையராஜாகங்கை அமரன்தாரை தப்பட்டை
Comments (0)
Add Comment