‘வேலைக்காரன்’ படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு அப்படத்தின் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது.
முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில், ”சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். அவருடன் ‘ரெமோ’ படத்திற்கு பிறகு இது எனக்கு இரண்டாவது படம்.
ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய அவரது ரசிகர்களை பின்பற்ற தொடங்கினேன். இது எனது எடிட்டிங்கிற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனை கதையோடு அழகாக இணைப்பது ஒரு சவாலான காரியமே.
‘வேலைக்காரன்’ போன்ற நட்சத்திர பட்டாளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட படத்தை எடிட் செய்வது எளிதான காரியமல்ல. கதைக்குள் பல பரிமாணங்கள் இருப்பதால் இந்த படம் சவாலாகவே இருந்தது. உணர்வுகள், ஜனரஞ்சக தன்மை மற்றும் சமுதாய பொறுப்பு ஆகிய அம்சங்களை சரியான கலவையில் தருவது எனது இலக்காக இருந்தது. அது இந்தப்படத்தில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புது ரசனையாக இருக்கும்” என்றார்.