கெளதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிப்பில் ‘அடல்ட் காமெடி’ என்கிற அடையாளத்தோடு ரிலீசான படம் தான் ‘ஹரஹர மஹாதேவகி.’
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.ஈ ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படத்துக்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’என்று ஏடாகூடமான டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.
ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கூட்டணியே மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.