நேற்று மே 27ம் தேதி கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் ‘கககபோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறபித்த ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் விஜய் நடித்த தலைவா படத்துக்கு ஆளும் கட்சியால் தரப்பட்ட நெருக்கடி குறித்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டார்.
”இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளியிடுவதில் பிரச்சனை வருகிறது, அதுபோல் தான் விஜய் நடித்த ‘தலைவா’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன்.
இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது. இது போல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு” என்று கூறி முடித்தார்.
தலைவா திரைப்படத்துக்கு அதிமுக அரசால் சென்ற ஆட்சிக்காலத்தில் நெருக்கடி கொடுக்கப்பட்டது என்று விஜய் ரசிகர்களால் கருதப்பட்டு வந்த நிலையில் ஜெ.அன்பழகனின் இந்தப் பேச்சு அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.