ஜெய், அஞ்சலி நடிப்பில் தயாராகியிருக்கும் பலூன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி ரிலீசாகவுள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்திலும் நடிக்கும் அவர் அடுத்து ‘ஜருகண்டி’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் மூலம் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
இந்த புதிய அவதாரம் குறித்து நிதின் சத்யா பேசுகையில், ”இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே ‘ஜருகண்டி’ முடிவானது.
இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. இந்தப்படம் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும். பலராலும் கவனிக்கப்படும், எதிர்பார்க்கப்படும் ரேபா ஜான் இப்படத்தின் கதாநாயகி. இவர்களுடன் ரோபோ ஷங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
போபோ சஷி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். K L பிரவீன் படத்தொகுப்பில், அர்வியின் ஒளிப்பதிவில், ரேமியனின் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இயக்குனர் பிச்சுமணியின் எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்கள் அறிவார்கள்.
இப்படத்தை நிதின் சத்யாவின் ‘ஷ்வேத்’ நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.