‘உணர்வு இருந்தா மெரினாவுக்கு வா’ : நடிகர் சங்க போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு #SayNoToNadigarSangam

பெருங்கூட்டத்துக்குள் பெருச்சாளிகளை அவிழ்த்து விட்ட கதையாகி விட்டது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் அறிவித்திருக்கும் போராட்டம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க மாணவர்களும், இளைஞர்களும் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

அதுவரை சரி. அதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் தன்னிச்சையாக நாளை ஒருநாள் மெளன அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நாளை ஜனவரி 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம் என
நேற்று நிருபர்களிடம் பேசிய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.

அவர்களின் இந்த போராட்ட அறிவிப்பு தான் இப்போது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“தாமதமான போராட்டம் எங்களுக்குத் தேவையில்லை”, “போராட வேண்டும் என்றால் எங்களோடு மெரினாவில் வந்து உட்காருங்கள்”, உண்மையா போராடனும்னு நனைச்சிருந்தா இந்நேரம் களத்துல நின்றுக்கனும்” ”காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிடாது” என்று சொன்ன நடிகர் சங்கம் இப்போது மட்டும் ஏன் போராட்டத்தில் இறங்குகிறது? என்று ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

அவர்களின் இந்த எதிர்ப்பிலும் காரணம் இல்லாமல் இல்லை.

இதுவரை நடந்து வருகிற போராட்டங்களை ஒட்டுமொத்த ஊடகங்களும் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பி வருகின்றன. இந்த சமயத்தில் நடிகர், நடிகைகள் போராட்டத்தில் இறங்கினால் மீடியாக்களின் கேமரா கோணங்கள் அவர்களின் பக்கம் திரும்பி தங்களின் போராட்டம் நீர்த்துப் போகக்கூடிய சூழல் உருவாகி விடுமோ? என்பதால் தான் நடிகர் சங்கப் போராட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

நியாயம் தானே?

JallikattuKarthiNadigar SangamNassarSave JallikattuSay No To Nadigar Sangamvishal
Comments (0)
Add Comment