கேளிக்கை வரி விவகாரம்; ஏன் விஜய்யும், அஜித்தும் வாயைத் தொறக்கல? : ஜெயம்ரவி கேள்வி!

நியாயமாகப் பார்த்தால் திரைப்படத்துறைக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி என்று மத்திய அரசு அறிவித்தபோது ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தான் முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த லிஸ்ட்டில் இருக்கும் கமல் மட்டுமே வரியைக் குறைக்கவில்லை என்றால் நான் சினிமாவை விட்டே விலக நேரிடும் என்று துணிச்சலாக எச்சரித்தவர் கமல் மட்டுமே!

மற்ற மூன்று பேரில் ரஜினி கூட ஊரே சேர்ந்து கும்மியடித்த பிறகு தான் எங்கே சமூகம் தன்னை தவறாக நினைக்குமோ என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு மட்டும் கோரிக்கை ஒன்றை சாப்ட்டாக வைத்தார். ஜி.எஸ்.டியைப் பற்றி பேசவேயில்லை.

சரி விஜய், அஜித்?

அவர்கள் ”ஜி” என்கிற வார்த்தையைக் கூட உச்சரிக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிற லெவலில் தான் இருந்தார்கள். இப்படி ஒட்டுமொத்த திரையுலகமும் பாதிக்கப்பட்டிருக்கும் இக்கட்டான நிலையில் கூட பெரிய ஹீரோக்கள் வாய் திறக்காதது பற்றி ஜெயம் ரவி நேற்று கேள்வி எழுப்பினார்…

மத்திய அரசின் பிடி ஒரு பக்கம் இருக்க, மாநில அரசும் தன் பங்குக்கு 30 சதவீதம் கேளிக்கை வரியைப் போட ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் அதிர்ந்து விட்டனர். நான்கு நாட்கள் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட படங்களில் ஜெயம் ரவியின் ”வன மகன்” படமும் ஒன்று.

இன்று மறு வெளியீடாக வந்திருக்கும் அப்படக்குழுவுடன் வந்திருந்த ஜெயம் ரவி ”தமிழ்த்திரையுலகில் ஒற்றுமையில்லை” என்று வருத்தப்பட்டார்.

”வனமகன் படத்தை மே 19ம் தேதி ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணியிருந்தோம், அப்போ தயாரிப்பாளர் சங்கம் சார்புல ஸ்டிரைக் நடக்கும் சொன்னாங்க. அதை மதிச்சி ரிலீஸ் தள்ளிப் போனோம், அதுக்கப்புறம் ஏகப்பட்ட தடங்கள் வந்துச்சு. அதுக்கப்புறம் ஜி.எஸ்.டி பிரச்சனை இப்படி எல்லாவற்றையும் தாண்டி தான் இந்தப்படம் ரிலீசாச்சு. இந்த மாதிரி பிரச்சனைகள் சினிமாவுல எல்லோருக்கும் இருக்குன்னு ஏன் மத்தவங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்கன்னு தெரியல.

ஆக இழப்புங்கிறது எல்லோருக்கும் ஒண்ணு தான். இந்த சினிமாவை ஒரு உன்னதமான தொழிலாக நினைத்து வேலை செய்றேன். டாக்டர் தொழில் தான் உன்னதமானது. ஆனால் அந்த டாக்டர்களே வேலை டென்ஷன்ல என்ன பண்றதுன்னு தெரியாமல் அவங்களே படம் பார்க்கத்தான் வர்றாங்க, அப்படிப்பட்ட சினிமாத் தொழில் அழியவே கூடாது.

எல்லோரையும் சந்தோஷப்படுத்துறது சினிமா மட்டும் தான். அப்படிப்பட்ட பொழுதுபோக்குக்கு வரிக்கு மேல வரி போடுறாங்க. எவ்வளவு தான் திருட்டு வி.சி.டி ஆன்லைன் பைரசி வந்தாலும் தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க.” என்றார்.

முன்னதாக சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களை சந்தித்த ஜெயம் ரவி ”ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்ததுரைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதன்காரணமாக தான் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய், அஜித் போன்ற பரபல நடிகர்கள் ஜி.எஸ்.டி’க்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை? திரையுலகுகிற்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்படவேண்டும். தமிழ்திரை உலகினரிடையே ஒற்றுமை இல்லை, இதனால் திரையுலகில் உள்ள பல பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் இருக்கிறது.” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ajithGSTJayam RaviTN Taxvana maganvijay
Comments (0)
Add Comment