வெற்றி, தோல்வி இரண்டிலும் என்னோடு இருப்பது ரசிகர்கள் தான்! : ஜெயம் ரவி நெகிழ்ச்சி

புதிய புதிய கதைக்களம் ஒரு பக்கம் இருந்தாலும் புதிய புதிய கேரக்டர்களை செய்து பார்ப்பதில் ஆர்வம் கொண்ட ஹீரோக்களில் ஜெயம்ரவியும் ஒருவர். ”தனி ஒருவன்”, ”பூலோகம்”, ”ரோமியோ ஜுலியட்” என தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களத்துடன் வருகின்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் அடுத்து இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் ”வன மகன்” படத்தில் இணைந்திருக்கிறார்.

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில் அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் ஜெயம்ரவி படம் முழுக்க வசனமே பேசாமல் உடல்மொழியால் மட்டுமே பேசியிருக்கிறார. இதில் அவருக்கு ஜோடியாக சாயீஷா அறிமுகமாகிறார்.

ஹாரீஸ் ஜெயராஜின் 50-வது படம் என்கிற கூடுதல் விசேஷத்தோடு தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மனம் திறந்து சில கருத்துகளை பேசினார்…

”நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டுந்தேன், ஆனா டைரக்டர் விஜய்யை சந்திச்சதுக்கு அப்புறம் நிச்சயம் நான் நல்லவன் இல்லேன்னு உணர்ந்தேன். நான் வனமகன்னா, இயக்குனர் விஜய் தெய்வ மகன். அந்தளவுக்கு இந்தப்படத்தை அவர் சிறப்பா எடுத்திருக்கார். இந்தப் படத்துல என்னோட ஜோடியாக நடிச்சிருக்கிற சாயீஷா ஆக்டிங், டான்ஸ் ரெண்டுலேயும் பின்னி எடுத்திருக்காங்க. இந்தப்படம் ரிலீஸ் ஆச்சின்னா அவங்களோட கால்ஷீட் கெடைக்கிறது ரொம்பக் கஷ்டம். அதனால் அவங்களை இப்பவே புக் பண்ணிருங்க.

இந்த நடிக்கிற வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் செய்ற வேலை எனக்கு போரடிச்சிட கூடாதுன்னு தான் வித்தியாசமான கதைக்களங்கள்ல படம் பண்ணிட்டு இருக்கேன். அதை ரொம்ப சப்போர்ட் பண்ணி, வெற்றி தோல்விகள்ல கூட இருக்குற என் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி” என்றார் ஜெயம் ரவி.

படத்தின் ஆடியோ சிடியை இயக்குனர் பாலா, லைகா புரொடக்‌ஷன்ஸ் ராஜு மகாலிங்கம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட நா.முத்துக்குமார் மகன் ஆதவன் முத்துக்குமார் பெற்றுக் கொண்டார். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், நடிகை சரண்யா பொன்வண்ணன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் மோகன், ஒளிப்பதிவாளர் திரு, நடிகர் உதயா, சாம் பால், எடிட்டர் ஆண்டனி, நடிகர் வருண், நடிகர் சண்முகராஜன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Jayam RaviSayesha SaigalVanamaganVanamagan Audio Launch
Comments (0)
Add Comment