ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்க, நடிகர் விஜய் சேதுபதி தனது விஜய் சேதுபதி புரொடக்ஷன் சார்பில் தயாரித்த படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா நடித்திருக்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி படத்தின் ஆடியோ சிடியை வெளியிட, படக்குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
நீல வண்ணத்தில் சட்டையும், இளம் பச்சை வண்ணத்தில் வேட்டியுமாக மேடையேறி விஜய் சேதுபதி பேசுகையில், ”இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது.
எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.
படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்.’ என்றார்.
பின்னர் பேசிய நடிகை சரண்யா பொன் வண்ணன் பேசும் போது விஜய் சேதுபதி பற்றிய ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது,‘ நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்த போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா? என கேட்பார்.
அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என்றார்.
விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி, பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.