சோறுபோடுகிற விவசாயிகளையே பிழிந்து எடுக்கும் பிரதமர் மோடி கோடிகள் கொழிக்கும் திரைப்படத்துறையை மட்டும் சும்மா விட்டு விடுவாரா என்ன?
நாடு முழுவதும் ஒரே சீரான வரி என்ற பெயரில் வர இருக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் திரைப்படத்துறைக்கு 28 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டிருக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.
இந்த அதிகபட்ச வரி திரைப்படத்துறையை சீரழிவுக்கு கொண்டு செல்லும் என்று திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும் சமீபகாலமாக சமூக நிகழ்வுகள் எது நடந்தாலும் அது சம்பந்தமாக துணிச்சலாக கருத்துகளை சொல்லி வரும் கமல்ஹாசன் இன்று ஜி.எஸ்.டி வரி தொடர்பாகப் பேச தமிழ்த்திரையுலகின் முக்கியஸ்தர்களுடன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் எடுக்கப்போவதாகச் சொன்ன முடிவு தான் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி என்ன சொன்னார் கமல்?
சினிமா என்பது சூதாட்டம் போன்றது அல்ல, சினிமா என்பது கலை. ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது. புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரியில் திரைப்பட தயாரிப்புக்கு 28% சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது கட்டுப்படியாகாத ஒன்றாகும்.
இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28% வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது. திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்
அதையும் மீறி 28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் நான் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியே இல்லை, இந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். என்று காட்டமாகப் பேசினார் கமல்.
ஏற்கனவே ‘விஸ்வரூபம்’ படப்பிரச்சனையில் நாட்டை விட்டே வெளி்யேறுவேன் என்று பேசி மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்த கமல் இப்போது சினிமாவை விட்டே வெளியேறுவேன் என்று எச்சரித்து அவருக்கு நெருக்கமான மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
கமல் சொன்னால் அவரது ரசிகர்கள் கேட்பார்கள். மோடி கேட்பாரா?