‘கத்தி’ படம் தமிழில் ரிலீசாகும் வரை அந்தப் படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடி ஒருவர் செய்த சட்டப்போராட்டம் கடைசியில் அவரே எனக்கும், அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிப் போகிற அளவுக்கு பிசுபிசுத்துப் போனது.
படம் ரிலீசானவுடன் பெரிய அளவில் ஹிட்டாக, அதே படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஏதாவது பிரச்சனை வருமோ? என்று முன்னணி ஹீரோக்கள் எல்லோரும் பயந்து ஒதுங்க, நிஜ அரசியல்வாதியும், நடிகருமான சிரஞ்சீவி அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
மேலும் இது சிரஞ்சீவியின் 150வது படமென்பதால் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் இருந்தது.
இந்நிலையில் தெலுங்கிலும் இந்தப்படம் இப்போது ரீமேக் ஆவதில் புதிய சிக்கலை சந்தித்திருக்கிறது.
‘கத்தி’ திரைக்கதை என்னுடையது, அதை ஏ.ஆர். முருகதாஸ் படமாக்கி விட்டார் என்று எழுத்தாளர் நரசிம்மராவ் என்பவர் புகார் அளித்திருக்கிறார். பிரச்னையை தீர்ப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அதில் தீர்வு ஏற்படும் வரை ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யக்கூடாது என்று படம் ஆரம்பிக்கப்போகும் இந்த நேரத்தில் எதிர்ப்புக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் மூத்த இயக்குநரான தாசரி நாரயண ராவ்.
மேலும் அங்குள்ள தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு படப்பிடிப்புக்கு கிடைக்காது என்பதால் ‘கத்தி’ தெலுங்கில் ரீமேக் ஆவது இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போகும் என்றேதெரிகிறது.