குய்கோ- விமர்சனம்

ஒரு கிராமத்து வாழ்வியலை அதன் எதார்த்தம் மீறாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் டி.அருள் செழியன்

தன் தாயின் உடலை தாங்கி வைத்திருந்த ப்ரீசர் பாக்ஸை கோவிலாக நினைக்கும் ஒரு நாயகன். அந்த ப்ரீசர் பாக்ஸை கொண்டு வந்து ஊருக்குள்ளே இருக்க நேரிட்டு அதை ஏற்றுக்கொள்ளும் இன்னொரு நாயகன். இந்த இரு நாயகர்களின் வாழ்க்கைப்பாடுகள் தான் படத்தின் கதை. மேலும் பல கிராமத்து மனிதர்களின் சில தரமான சம்பவங்களும் கதையில் அடங்கும்

விதார்த் தன் அளவு அறிந்தும், படத்தில் தன் கேரக்டர் இருக்கும் களம் புரிந்தும் அருமையாக நடித்துள்ளார். யோகிபாபு பெரிதாக மெனக்கெடவில்லை என்றாலும் அவரின் கேரக்டருக்குள் பொருந்தி போய்விடுகிறார். காதலியைப் பார்க்கும் ஒரு காட்சியில் பெரியளவில் ஸ்கோர் செய்துவிடுகிறார். நாயகி பிரியங்கா அழகாக இருக்கிறார். அழகாகவும் நடிக்கிறார். படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் இளவரசு. ஒரு ஊர் பெரியவரின் கேரக்டரை அழகாக பிரதிபலிக்கிறார். எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், ஒரு பாட்டி, உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. போலவே அந்தோணி தாசன், கெவின் மிரண்டா ஆகியோரின் இசையில் பாடல்களும் பின்னணி ஸ்கோரும் அபாரம்.

மாலை முரசு பேப்பர் மறுநாள் காலையில் வருவதும், தினத்தந்தி பேப்பர் மாலையில் வருவதுமாக உள்ள ஒரு கிராமத்தை கதையின் களமாக தேர்ந்தெடுத்து அக்கிராமத்து மனிதர்களாக நம் நடிகர்களை உருமாற்றிய திலே இயக்குநர் பாதிகிணறு தாண்டி விட்டார். படம் துவங்கிய உடன் வரும் ஒருசில காட்சிகளும், இடைவேளைக்குப் பின் வரும் ஒரு சில காட்சிகளும் சிறிது நம்மை அந்நியப்படுத்தினாலும், அந்தக் காட்சிகளில் கூட தரமான வசனங்களை வைத்து பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர். Over all குய்கோ நம்மை தியேட்டரை நோக்கிப் போய்க்கோ என தள்ளுகிறது
3.25/5

actor Vidaarthactor yogibabudirector Arulchezhiankuiko movie