மத்திய அரசின் 28 சதவீத ஜி.எஸ்.டி வரியோடு தமிழக அரசு கொண்டு வந்த 30 சதவீத உள்ளூர் வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள்.
58 சதவீதம் வரி கட்டினால் திரைப்படத்துறை நலிந்து விடும் என்று ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
ஆனால் கோடி கோடியாக சம்பளமும் வாங்கிவிட்டு அரசிடம் வரிச்சலுகையும் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் சினிமாவை காப்பாற்றும் லட்சணமா? என்றும் முன்னணி ஹீரோக்கள் மீது பாய்ந்திருக்கிறார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
”திரைப்படத் தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்துவிட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள்.
படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்பரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரிவிலக்கு கேட்டு நிற்கிறார்கள். இது சினிமாவை காப்பாற்றும் நடவடிக்கைகளா…?
நான் ஒட்டு மொத்தமான தமிழ் சினிமாவுக்காக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன். நம்மிடம் அற்புதமான திறமைகள் இருக்கிறது. ஆனாலும் பக்கத்து மாநில சினிமாவை போல் சிறந்த படங்கள் எடுப்பது இல்லை. நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வியாபார ரீதியிலான சினிமாவை விடுத்து புதிய கதைகளை ஊக்குவித்தால் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். ‘ஜோக்கர்’ போன்ற படங்களையும் எடுக்க முடியும்.
இயக்குநர்களுக்கு இலக்கியம், வரலாறு, நமது கலாசாரம் ஆகியவை பற்றிய அறிவு வேண்டும். பெரிய நடிகர்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை விட்டுவிட்டு, நல்ல கலைஞர்களாக மாற வேண்டும். நடிகர்கள் கதைகளுக்கு பின்னால் ஓட வேண்டும். எழுத்தாளர்களையும் இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்கள் தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். வரி விலக்கால் மட்டும் சினிமாவை காப்பாற்ற முடியாது” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.