மகளிர் மட்டும் – விமர்சனம்

RATING 3/5

நட்சத்திரங்கள் : ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஷ்டன், பாவல் நவகீதன், மாதவன், விதார்த் மற்றும் பலர்

இயக்கம் : பிரம்மா

இசை : ஜிப்ரான்

வகை : நாடகம்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’

நேரம் : 2 மணி நேரம் 20 நிமிடங்கள்

பெண்ணியத்தை திரையில் பேசுகிற படங்கள் தமிழ்சினிமாவில் மிக மிகக்குறைவு. அவ்வளவு ஏன் பெண் இயக்குநர்களே ஆக்‌ஷன், கமர்ஷியல் என பாதை மாறி பயணிக்க ஆரம்பித்து விட்ட இந்தக் காலகட்டத்தில் பிரம்மா போன்ற ஒரு சில ஆண் இயக்குநர்கள் பெண்களின் மன உளவியலை காட்சிவடிவமாக்க முன் வந்திருப்பதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

குடும்பம் என்றாகி விட்ட பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி ஒரு ஆண் மகனால் அடிமை மனோபாவத்தோடு கட்டியமைக்கப்படுகிறது, இதனால் தன்னுடைய சுதந்திரத்தை இழந்த உணர்வை அவள் எப்படி வெளிப்படுத்துகிறாள். அப்படிப்பட்ட ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கிற பெண்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேரும் போது அவர்கள் மனக்குமுறல்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதை எளிமையாக காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘மகளிர் மட்டும்.’

திருமணத்துக்குப் பிறகு வீட்டில் இருக்கும் பெண்களின் மனநிலை எப்படியிருக்கும்? என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுக்கிறார் ஆவணப்பட இயக்குநரான ஜோதிகா.

அதற்காக தனது வருங்கால மாமியாரான ஊர்வசியிடம் அவரது அனுபவங்களைக் கேட்கிறார். அப்போது பள்ளி நாட்களில் தன் தோழிகளாக பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கல்லூரிப் படிப்பின் போது தான் செய்த கட்டுப்பாடற்ற குறும்புத்தனங்களுடன் கூடிய இளமை வாழ்க்கையை விவரிக்கிறார்.

சுதந்திரப் பறவைகளாக வாழ்ந்த அந்த மூவரின் திருமண வாழ்க்கையும் எந்த லட்சியமும் ஆசைகளும் இல்லாமல் கணவனும், பிள்ளைகளுக்குமான வாழ்க்கை என்று ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்கிறது. ஆளுக்கொரு திசையில் வாழும் அவர்களை ஃபேஸ்புக் உதவியுடன் 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க வைக்கிறார் ஜோதிகா. அதன்பிறகு நடக்கும் சுவாரஷ்யங்கள் தான் கிளைமாக்ஸ்.

இதுபோன்ற படங்களில் எமோஷனல் விஷயங்களுக்கு பஞ்சமிருக்காது. நல்ல வேளையாக அப்படி பொறுமையைச் சோதிக்கிற அளவுக்கு பெண்களின் சங்கடங்களை மட்டுமே காட்சிப்படுத்தாமல் அங்கங்கே கமர்ஷியலாகவும் யோசித்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.

ஜோதிகாவிடம் இருக்கும் பிளஸ் பாயிண்ட்டே அந்த க்யூட்னெஸ் தான். அது இந்தப்படத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே வெளிப்பட்டிருக்கிறது. ஆவணப்பட இயக்குநர் என்கிற கேரக்டருக்கு மிகப்பொருத்தம், எப்போதுமே துருதுருவென்று இருக்கும், எதையுமே பாசிட்டீவ்வாக அணுகும் அவருடைய கேரக்டர் மனசுக்குள் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது.

ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் என மூன்று சீனியர் நடிகைகளுக்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கேரக்டர். மூவரும் தத்தம் கேரக்டர்களில் போட்டு போட்டுக் கொண்டு நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சரண்யா பொன் வண்ணனின் அந்த அறிமுகக் காட்சி அழுத்தமாகப் பதியும். உடம்பு முடியாமல் இருக்கும் போது கூட பொறிந்து தள்ளுகிற மாமியாரை தன் அம்மாவைப் போல அர்ப்பணிப்போடு கவனிக்கிற விதம் ஒவ்வொரு ஆண்மகனையும் நெகிழச் செய்யும்.

ரத்தம் வழிய வழிய நைட்டியுடன் கர்ப்பிணிப் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்வது, பிரசவம் முடிந்து ஒரு சில நாட்களே ஆன மனைவியை தன் அப்பாவின் கால்களில் விழச் சொல்வது போன்ற சில யதார்த்த வாழ்க்கை நிகழ்வுகளை ஆங்காங்கே காட்டிய விதத்திலும், மனிதன் மலம் அள்ளும் அவலம், தமிழீழ நினைவேந்தல், உடுமலைப்பேட்டை சங்கரின் ஆவணக்கொலை என வேறு சில சமூக பிரச்சினைகளை கதையின் வீரியம் குலையாத வண்ணம் காட்டிய விதத்திலும் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் பிரம்மா.

நாசர், லிவிங்க்ஸ்டன், பாவல் நவகீதன், கோகுல், விதார்த் கிளைமாக்ஸை ஒட்டி வந்தாலும் மறக்கவே முடியாத மாதவன் என படத்தில் வருகிற அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

‘பொம்பளைக இருக்கற வீட்டுல சாப்பாட்டுல முடி விழத்தான் செய்யும், நாமதான் எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்’. ”பந்து தூக்கிப்போடுறது மட்டும் தான் நம்மோட வேலை… சமயத்துல நம்ம ஆட்டத்தை வேற ஒருத்தர் கூட ஆடறாங்க, ஆம்பளை சமைக்கிற வீட்டுல குபேரன் குப்புறப் படுத்துக்கெடப்பான் போன்றவை ஆண் சமூகத்தை நிஜமாகவே சிந்திக்க வைக்கின்ற ‘நச்’ வசனங்கள்.

பெண்ணியம் பேசுகிற படமென்பதாலோ என்னவோ முதல் பாதியில் அளவுக்கு அதிகமாகவே தெரிகிற நாடகத்தனம் படம் பார்க்கிற ஆர்வைத்தை குறைக்கிறது, மூன்று பேர்களுடைய ப்ளாஷ்பேக் காட்சிகளும் இழுவையோ இழுவை. பிக்பாஸ் டாக்ஸ் மாதிரி மூன்று பேருக்கும் ஜோதிகா கொடுக்கும் டாஸ்க்குகள், மூத்தவர்களுக்கு ஜோதிகா கொடுக்கும் அளவுக்கு அதிகப்படியான அட்வைஸ்கள் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன.

தாஜ்மஹாலை அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது மணிகண்டனின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம் இல்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார்.

பெண் அடிமைத்தனம் என்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிரானது என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். இந்த மனமாற்றம் திருமணமான ஒவ்வொரு ஆண் மகனின் மனசுக்குள்ளும் வருமேயானால் அதுதான் இப்படத்துக்குக் கிடைத்த உண்மையான வெற்றி!

BhanupriyaBrammaGhibranJyothikaMagalir MattumMagalir Mattum Movie ReviewMagalir Mattum ReviewSaranyaUrvashi
Comments (0)
Add Comment