சிவகார்த்திகேயன் படத்தில் எண்ட்ரி : தமிழுக்கு வருகிறார் பகத் பாசில்

லையாள திரையுலகில் இருந்து தமிழ்சினிமாவுக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் இங்கு வரக்காரணமாகி கொண்டிருக்கிறது.

அந்த லிஸ்ட்டில் காதலுக்கு மரியாதை, வருஷம் 16, மற்றும் பல்வேறுப் வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாசிலின் மகனான பஹத் பாசில் தமிழில் அறிமுகமாகிறார்.

தனக்கென பொருந்தும் கதாப்பாத்திரத்தில், கதையின் போக்கை நிர்மாணிக்கும் பாத்திரமாக இருந்தால் போதும், கதாநாயகனாக இல்லாமல் போனாலும் சரி என்று நடிக்கும் பஹத் பாசில் மொழியையும் தாண்டி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்ட இருக்கிறார். அவர் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ சென்னையில் மட்டுமே ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது என்பதுக் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு இதுவே சான்று.

பஹாத் தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இயக்குநர் மோகன்ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறுகிறார் பாஹத் பாசில்.

‘தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அதிலும் ‘தனி ஒருவன்’ படம் பார்த்தப் பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என சொல்லலாம். நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னை பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன்.

இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு பெருமை. மிக குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானது கூட. என்னுடைய கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார்.

Fahad FazilNayantharasivakarthikeyanசிவகார்த்தியேகன்நயன்தாராபகத் பாசில்
Comments (0)
Add Comment