அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது.
சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹமதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…
நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி, இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்.
மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷயத்தை இந்தப்படம் பேசுகிறது, தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார், அது அவரது பலம். இந்தப்படத்தில் எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள், என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப்படத்தை நன்றாக செய்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.