இப்படத்திற்கு 80 நாட்களாகியும் இந்தியாவில் தணிக்கை சான்றிதழ் தரப்படவில்லை. அதற்கு சரியான காரணங்களை சொல்லாமல் இரண்டு முறை நிராகரித்துள்ளனர்.
இதனால் அந்த படத்தை தயாரித்திருக்கும் நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம். மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நிறைவு நாளில் ஏற்பட்ட கலவரங்களுக்கு யாரெல்லாம் காரணம்? உள்ளிட்ட பல மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லும் படமென்பதால் எந்தக் காரணமும் சொல்லாமல் இந்திய தணிக்கைத் துறை சான்றிதழ் தரவில்லை. இப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்படும் சென்சார் அதிகாரிகளுக்கு படைப்புச் சுதந்திரம் எந்தளவுக்கு மதிக்கப்பட வேண்டுமென்றும், அரசு அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டுமென்றும் பாடம் புகட்டும் விதமாக மெரினா புரட்சி படத்துக்கு தன் நாட்டில் சான்றிதழ் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.
அதன்படி சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு ‘மெரினா புரட்சி’யை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.