மிகமிக அவசரம்- விமர்சனம்

பெண்கள் சம்பந்தப்பட்ட படங்கள் தமிழ்சினிமாவில் அடிக்கடி வருவது மகிழ்ச்சிக்குரியது. சுரேஷ்காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் மிகமிக அவசரம். எதாவது பிரபல அரசியல் வாதிகள் வரும் சாலைகளில் பெரும் டிஃராபிக் இருக்கும். டிஃராபிக் சரியானதும் நாம் அந்தச்சாலையை கடந்து மறந்து போய்விடுவோம். ஆனால் அந்தச்சாலையில் காக்கி யூனிபார்ம் அணிந்து நிற்கும் பெண் காவலதிகாரிகளுக்கு அன்றைய நாள் கடும் அவஸ்தைக்குள்ள நாளாகத்தான் இருக்கும். அப்படியான பெரும் அவஸ்தையை எதிர்கொள்கிறார் மிகமிக அவசரம் படத்தின் நாயகி பிரியங்கா. அதற்கான காரணம் மூத்த அதிகாரி ஒருவரின் வன்மம். இவற்றை எப்படி எதிர்கொண்டார் பிரியங்கா என்பது தான் ஒட்டுமொத்த படத்தின் கதை.

படத்தின் டைட்டில் கார்டில் ஒரு காவலதிகாரி பிரியங்காவிடம் போனில் பாலியல் டார்ச்சர் கொடுக்கிறார். அந்த வாய்ஸ் எழுத்தாளர் கேபிள்சங்கரின் குரலாம். குரல்வழியே மிகச்சிறப்பாக படத்திற்குள் போக வைத்திருக்கிறார் இயக்குநர்.

பிரியங்காவிற்கு இது தன் வாழ்நாள் எல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவிலான படம். கொஞ்சம் பிசகினாலும் நடிப்பில் மிகைத்தன்மை தெரிந்துவிடும். கவனமாக நடித்து கவனிக்க வைத்துள்ளார். படத்தில் நடித்துள்ள ஏனையப் பாத்திரங்கள் எல்லாமே கவனிக்க வைக்கின்றன. படத்தை முடித்து வைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் சீமான் வெகு இயல்பாக நடித்துள்ளார். வசனங்களில் இருந்த நேர்த்தி இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னணி இசை எல்லாம் சிறியபட்ஜெட் படம் என்பதை ஞாபகப்படுத்தாத வகையில் தரமாக இருக்கின்றன.

மிகப்பெரிய ஆர்ப்பாட்ட கொண்டாட்டத்திற்கான படமல்ல. ஆனால் அவசியம் ஆதரிக்க வேண்டிய படம்.

4/5

migamiga avasarampriyankaseeman
Comments (0)
Add Comment