நல்ல தலைப்பு வேண்டுமா? என்னிடம் வாருங்கள் – அழைக்கிறார் வைரமுத்து

”அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்” என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டிய இருக்கிறது.

சென்ற வாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெரும் காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது, ”சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும்.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். நுட்பமான விசயங்கள் நெடுநல்வாடை படத்தில் இருக்கும். கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் ஒருதாய் கிணற்றை எட்டிப் பார்க்கும் காட்சியில் என் மனம் துடித்துவிட்டது.

இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள்.

இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா?என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாக கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்” என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு.

Ajay NatrajAnjali NairNEDUNALVAADAINedunalvaadai Success MeetSelvakannanVairamuthu
Comments (0)
Add Comment