இந்த யதார்த்தம் தெரிந்திருந்தும் ஈகோ காரணமாக தொடர்ந்து தயாரிப்பாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் தமிழகத்திலுள்ள சில தியேட்டர் முதலாளிகள்.
அதன் விளைவாக எப்படியும் இரு வாரத்துக்குள் பிரச்சனைகள் தீர்ந்து ஸ்டிரைக் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்த தியேட்டர் உரிமையாளர்கள் ஒருமாதம் ஆகியும் படங்கள் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தமிழ்படங்களைத் தானே ரிலீஸ் செய்ய மாட்டீர்கள், நாங்கள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களை தியேட்டர்களில் ஓட்டுவோம் என்று முடிவெடுத்து கடந்த சில வாரங்களாகவே மற்ற மொழிப்படங்களையும், பழைய தமிழ்ப்படங்களையும் ஓட்டி வருகிறார்கள்.
இதில் பழைய தமிழ்ப்படங்களை ஓட்டுவது கூட பிரச்சனையில்லை. மற்ற மொழியில் வெளியாகும் புதுப்படங்களுக்கு எப்படி கதவை திறந்து விடலாம் என்பது தான் விஷாலை நோக்கி திரையுலகினர் பலரின் கேள்வியாக இருந்தது. அப்படியானால் தமிழ்ப்படங்களுக்கு தடை விதித்து விட்டு தமிழ்நாட்டில் மாற்று மொழிப்படங்களின் வசூலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறாரா விஷால் என்று பலரும் சந்தேகக் கேள்வியை பகிரங்கமாகவே எழுப்பியபடி இருந்தனர்.
அந்த சந்தேகம் உண்மை தான் என்பது போல ராம் சரண், சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படம் இந்த வாரம் தமிழ்நாட்டில் பல நூறு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதையடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய விஷால் தமிழ்நாட்டில் ஸ்டிரைக் முடியும் வரை தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.
விஷாலின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்துள்ளது.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகி 2’, ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களும் 7-ம் தேதியோடு தமிழக தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டு விடும்.
இப்படி தியேட்டர் உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக அடுத்தடுத்து கடும் நெருக்கடிகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கொடுத்து வருவதால் பேசாமல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை திரையிட்டு வசூலைப் பார்க்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
உங்களுக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!!