பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நடிகை ஓவியா. அந்த வீட்டுக்குள் போன சில வாரங்களுக்குப் பிறகு ஆரவ் உடனான காதல், ஜூலி மற்றும் காயத்ரியுடன் சண்டை போன்ற காரணங்களால் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து தன் சொந்த விருப்பத்தின் பேரில் அங்கிருந்து வெளியேறினார்.
வெளியேறியவர் சென்னையிலுள்ள ஒரு மாலில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்ததோடு, சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று விட்டார். அங்கு தனது தோழி ரம்யா நம்பீசன் அரவணைப்பில் இருப்பதாகவும், வீட்டை விட்டுக் கிளம்பி ஜாலியாக ஊர் சுற்றி வருவதாகவும் சொல்லும் ஓவியா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் இனி அந்த நிகழ்ச்சிக்கு வருவேனா? இல்லையா? போன்ற ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : “எனக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்கிறேன். நிஜமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸில் இருந்து ஜூலி, ஷக்தி வெளியே வந்துட்டாங்க. அவர்களின் நிலைமையை யோசித்து பார்க்கும்போது மனது வலிக்கிறது.
பிக்பாஸில் இருக்கும் போது ஒரு சிலர் என்னை கார்னர் பண்ணியது உண்மை தான். அப்போது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் வெளியே வந்த பின்பும் கூட ஷக்தி, ஜூலியை ஒரு சிலர் கார்னர் செய்கின்றனர். அது செய்யக்கூடாது. தயவு செய்து அப்படி யாரும் பண்ணாதீர்கள். அந்த சாபம் எனக்கு தேவையில்லை. நிகழ்ச்சியில் எல்லோருமே தப்பு செய்தார்கள். தப்பு செய்தால் தான் மனிதர்கள். கொலை செய்தவர்கள், பாலியல் குற்றங்கள் செய்தவர்களை அரசாங்கமே மன்னிக்கிறது. இது ஒரு விஷயமே இல்லை. அவர்களை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்றார்.
மேலும், “ இனி நான் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகப்போவதில்லை. ஆனால் படங்களில் நடிக்கப் போகிறேன். நான் நடிக்கும் படங்களை எனக்காக பார்க்கத் தேவையில்லை. படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் பாருங்கள். இல்லையென்றால் காரித்துப்புங்கள்” என்றார். மெதுவாக ஆரவ் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், “உண்மையான காதல் எப்போதும் தோற்காது. நான் காதலை நம்புகிறேன். ஒருவரை விரும்பிய பின் எதாவது காரணத்திற்காக அவரை வெறுக்க முடியாது” என்றார்.
மனநிலை பாதிக்கப்பட்டது என்கிற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் போது, “இப்போது எனக்கு மன அழுத்தம் இல்லை. விடுமுறையில் இருக்கிறேன். எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னுடைய முடியைக் கேட்டு ஒரு விஃக் கம்பெனி என்னை அணுகியது. பொண்ணுங்களுக்கு முடி போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. முடியை ஷேவ் செய்தால் கூட ஸ்டைலாகத் தான் இருக்கும். என்னுடைய ஹேர்ஸ்டைல் அழகாகத்தானே இருக்கிறது? என்னை ரோல் மாடலாக எடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. தயவு செய்து யாரையும் காப்பி அடிக்காதீர்கள். சந்தோஷமாக இருங்கள்” என்று கூறியவர் மறக்காமல் வீடியோவில் ரசிகர்களுக்கு தன் செல்ல நாயையும் அறிமுகம் செய்து வைத்தார்.