பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த்தின் ரீ-எண்ட்ரி படமென்பதால் சாகஸம் படத்தில் ஏதாவது ஸ்பெஷலாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடனே தியேட்டருக்கு போனார்கள் ரசிகர்கள்.
ஆனால் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பேசாமல் மிருதன் ஜெயம் ரவி போல ஷோம்பியாகப் போய் விடலாமா? என்று விபரீத முடிவெடுக்கக் கூடிய அளவுக்கு நொந்து போய் விட்டார்கள்.
அந்தளவுக்கு திரைக்கதையில் கடுகளவு கூட புதுமையே இல்லாத சாகசம் படத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரித்தார் தியாகராஜன். படம் ரிலீசாகும் வரை அப்படத்தின் இயக்குநரையே மீடியாக்களின் முகத்தில் காட்டாதது வேறு விஷயம்!
என்னதான் படத்தைப் பற்றி நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் 25 நாட்கள் விளம்பரமெல்லாம் கொடுத்து ஒரு வெற்றிப்படம் என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார் தியாகராஜன்.
இந்த வெற்றி போதாது என்று நினைத்தாரோ என்னவோ? இன்னும் இரண்டு படங்கள் பிரசாந்த்தின் நடிப்பில் தயாரிக்க தயாராகி வருகிறாராம் அவர்.
ஹிந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் அவர் அடுத்து அதே ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் ரிலீசான ஸ்பெஷல் 26 படத்தையும் ரீமேக் செய்யப்போகிறாராம்.
அதுமட்டுமல்ல கூடுதலாக வடகறி பட இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் ஒரு படமும், தண்ணில கண்டம் படத்தின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தையும் தயாரிக்கப் போகிறாராம்.
வருகிற படங்கள் எல்லாம் சாகஸம் போல அடித்து தாக்குமா? அல்லது அடி மனசுல தங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!