முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜெய்பிரகாஸ் என்பவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 9-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, முதலில் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். என்று கமலைப்பற்றி குமுறலை கொட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது… “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன.
தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு.
இந்த மரகதக்காடு குழுவினர் இந்தப் படத்தை தயார் செய்து விட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்பு கொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது.
நீங்கள் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்யுங்க. வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ்சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.
விழாவின் நிறைவாக ‘மரகதக்காடு இசைத்தகட்டை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார். விழாவில் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.