நாட்டில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் பொதுத்தேர்தலை விட பரபரப்பான தேர்தலாக நடந்தேறி விட்டது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்.
அரசியல் கட்சிகளின் தேர்தலைப் போலவே சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டி போட, செய்திச் சேனல்கள் கூட நேரடியாக ஒளிபரப்பும் அளவுக்கு பல காரசாரமாத விவாதம், மோதல், குற்றச்சாட்டுகள் என களைகட்டியது.
எல்லாம் முடிந்து நாசர் அணி வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றி விட்டார்கள்.
இதில் தேர்தலுக்கு முந்தைய நாள்வரை விஷால், சரத்குமார், ராதாரவி, ராதிகா ஆகியோர் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக திட்டிக்கொண்டது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இனிமேல் இரு அணியினரும் இணைந்து செயல்படுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்று சரத்குமார் பேசத் தொடங்க, ராதிகாவோ ஒருபடி மேலே போய் விஷால் ரெட்டி என்று அவர் சார்ந்த சாதியைக் குறிப்பிட்டு பேசி பரபரப்பை கிளப்பினார்.
இன்றும் கூட தேர்தல் முடிந்து சங்க கணக்கு வழக்குகள் விவகாரம் பூதாகரமாக தொடர்ந்தாலும் ஒருவருக்கொருவர் படங்களில் இணைந்து பணியாற்றுவது என்பது சமாதான உடன்படிக்கையில் முதல் படியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் விஷால் நடிக்கும் ‘மருது’ படத்தில் ராதாரவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கேரக்டருக்கு ராதாரவி சார் தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரை நடிக்க வைக்கலாமா? என்று விஷாலிடம் கேட்டாராம் டைரக்டர் முத்தையா.
அதற்கென்ன கேரக்டருக்கு சரியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் நடிக்க வையுங்கள். அவர்களோடு சேர்ந்து நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று ஒரே போடாக போட்டு விட்டார் விஷால்.
விஷாலுடன் சேர்ந்து நடிக்க ராதாரவியும் ஓ.கே சொல்ல சிறு உரசல் கூட இல்லாமல் மருது படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது.
அதேபோல விஷால் அணியில் இருந்த சூர்யாவின் தம்பி கார்த்திக்கையும் தேர்தல் சமயத்தில் கடுமையாக விமர்சித்தவர் ராதிகா. இப்போது அவரும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
நல்ல மாற்றம், வரவேற்போமே..?