சின்னத்திரையிலிருந்து வருகிற எல்லோருக்கும் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டக்காற்று அடிக்கிறது.
கே.பாலச்சந்தரால் ‘சஹானா’ என்ற சீரியலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜ் கமல் ‘மேல் நாட்டு மருமகன்’ என்ற படத்தின் மூலம் பெரிய திரையில் ஹீரோவாகியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அந்த படம் பல சிக்கல்களைத் தாண்டி இந்த வாரம் பிப்ரவரி 16-ம் தேதி ரிலீசாகிறது. அதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜ் கமல் ”என்னைப் போன்ற சீரியல் நடிகர்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது அவ்வளவு பெரிய பாவமா? சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த நான் அதற்காக பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தது” என்று வேதனையோடு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜ் கமல் “மேல் நாட்டு மருமகன் படத்தின் மூலம் என்னை பெரிய திரையில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் எம் எஸ் எஸ் அவர்களுக்கு இந்த நேரத்தில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்த நான் அடுத்த கட்டமான சீரியல்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக நூற்றுக்கணக்கான சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதற்கடுத்த கட்டத்துக்குப் போக ஆசைப்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது தான் இந்த ‘மேல் நாட்டு மருமகன்’ படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு இனி சீரியல்களில் நடிப்பது சரியாக இருக்காது என்பதால் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக என்னைத் தேடி வந்த 40க்கும் மேற்பட்ட சீரியல் வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன். சினிமாவில் சிறந்த நடிகனாக வர வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு முடிவை எடுத்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே எனக்கு ஹீரோவாக அமைந்து விட்டதால் இப்போது நான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறேன்.
சினிமாவில் ஒரு நடிகர் ஹீரோவாகி விட்டால் அதன்பிறகு அவரை மற்ற கேரக்டர்களில் நடிக்க வைக்க யோசிக்கிறார்கள். நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என்றைக்கும் சொன்னதில்லை. ஹீரோவாக வாய்ப்பு கிடைப்பது என்பது அதிர்ஷ்டம். அதைத்தாண்டி சினிமாவில் அண்ணன், தம்பி, வில்லன், மாமன், மச்சான் என வித்தியாசமான, வெரைட்டியான கேரக்டர்களில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன்.
என்றவர் சமீபத்தில் தனக்கு வர வேண்டிய பட வாய்ப்பு வராமல் போனது பற்றி வேதனையோடு விவரித்தார்.
‘சண்டிக்குதிரை’, ‘மேல் நாட்டு மருமகன்’, அடுத்ததாக ஒரு புதுப்படம் என தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிக்கிறேன். அப்படிப்பட்ட என்னை சமீபத்தில் ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நான் ஹீரோவாக நடித்து விட்டதால் அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து வெறோரு நடிகரை கமிட் செய்து விட்டார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் நான் வேதனைப்பட்டேன். நான் என்றைக்கும் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொன்னதே இல்லை. சினிமாவில் எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் நடிப்பேன். அதேபோல நானாக எனக்கு இவ்வளவு தான் சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடமும் டிமாண்ட் வைக்க மாட்டேன். தயாரிப்பாளர் எனக்கென்று எந்த சம்பளத்தை கொடுக்க நினைக்கிறாரோ? அந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிப்பேன். பணமெல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம் தான்.
நான் நடிகன், அதனால் வாய்ப்பு கேட்பது என்னுடைய பழக்கம். அதனடிப்படையில் தான் எல்லோருக்கும் புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு கேட்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக மிஸ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு சங்கடப்படுத்தியிருக்கிறேன். இந்த நேரத்தில் அவர்கள் எல்லோரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்றவர் இனி எந்தக் காரணம் கொண்டும் சீரியல்களில் நடிக்க மாட்டேன், சினிமாவில் மட்டும் தான் நடிக்கப் போகிறேன், அதில் தான் என்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தப் போகிறேன், எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.