புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு – சூர்யாவுக்கு ரஜினி ஆதரவு

த்திய அரசு விரைவில் கொண்டு வரப்போவதாகச் சொல்லப்படும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னணி நடிகரான ரஜினி சூர்யாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் பட பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ரஜினி.

விழாவில் பேசிய பாடலாசிரியர் கபிலன், சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கையைப் பற்றி ரஜினிகாந்த் பேசி இருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று மேடையில் ஆதங்கப்பட்டார்.

அதற்கு அதே விழாவில் பதிலளித்து பேசிய ரஜினிகாந்த், ”புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று இங்கு சிலர் சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு எனக்கு தெரிந்தது” என்று பாராட்டினார்.

பண மதிப்பிழப்பு நீக்கம், நதிநீர் இணைப்பு உட்பட மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.

Audio LaunchKaappaanKabilan VairamuthuMovie NewsRajinikanthSuriya
Comments (0)
Add Comment