தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று சொல்வது போல ஆளாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரஜினியின் மெளனமே இப்படி இவர்களைப் பேசத் தூண்டுகிறது என்றாலும் அவரது ரசிகர்கள் விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறார்கள்.
குறிப்பாக வட இந்தியாவிலிருந்து அடிக்கடி ஒரு காமெடி பீஸ் ரஜினியைப் பற்றி விமர்சிப்பார். இப்போது அவர் அடங்கி விட்ட நிலையில் பாலிவுட் நடிகரும், பாரதிராஜாவின் பொம்மலாட்டம் தமிழ்ப்படத்திலும் நடித்தவருமான நானே படேகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாலிவுட் நடிகர் நானே படேகர் செய்தியாளர் ஒருவரிடம் கூறும்போது
“ஒரு படத்தின் கதை தான் சூப்பர் ஸ்டார். படம் தான் சூப்பர் ஸ்டார். ஒரு திரைப்படத்தின் கதை சரியாக அமைக்கப்பட்டிருந்தால், அறிமுக நடிகர்கள் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி அடையும். அதுவே ஒரு திரைப்படம் மோசமான கதையில் உருவாக்கப்பட்டிருந்தால், எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும், அந்த படத்தை வெற்றி பெறச் செய்ய முடியாது.
பெரிய கதாநாயகர்களுக்காக முதல் 2 அல்லது 3 நாட்கள் மட்டும்தான் ரசிகர்கள் வருவார்கள். ஆனால், படம் சரியில்லை என்றால், கண்டிப்பாக அது தோல்விப்படமாகவே அமையும்” என்று ரஜினிகாந்த் பற்றியும், கபாலி படத்தின் வசூல் குறித்தும் மறைமுகமாக தாக்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.