தமிழை விட தெலுங்கில் தான் நடிகைகளுக்குள் முன்னணி நடிகர்களின் படங்களை வளைத்துப் போடுவதில் பெரிய போர் நடந்து வருகிறது.
அதிலும் சமீபகாலமாக ஸ்ருதிஹாசனுக்கும், ரகுல் ப்ரீத் சிங்குக்கும் இடையே படங்களை வளைப்பதில் பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் ‘சபாஷ் நாயுடு’,’எஸ் 3′ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதுபோக தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘கப்பர் சிங்’ படத்தில் நடித்தார். இப்படி கைவசம் படங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் புதிய படங்களை கமிட் செய்வதிலும் அவர் போட்டி போடுவதை விடவில்லை.
அப்படி தெலுங்கில் பவன் ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் அதற்கு ஸ்ருதியால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
இதுபோதாதா..? நான் எப்போது கூப்பிட்டாலும் பவனுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன ரகுல் ப்ரீத் சிங் பவனுக்கு ஜோடியாகி ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டி விட்டார்.
இதேபோலத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ரீமேக்கில் ஹிந்தி நடிகை பரிணிதி சோப்ரா நடிப்பதாக இருந்தது. சம்பள விவகாரம் காரணமாக எழுந்த சிக்கலில் அந்த வாய்ப்பையும் ரகுல் வளைத்துப் போட்டது குறிப்பிடத்தக்கது.