‘டிராஃபிக் ராமசாமி’யாக நடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன் : படத்தோட டைட்டிலும் அதேதான்

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நீதிக்கு தண்டனை’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற சமூக பிரச்சனைகளை அலசிய முக்கியமான படங்களை இயக்கியவர் என்பதால் தமிழ் சினிமாவில் ‘புரட்சி இயக்குநர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இவர் தற்போது ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகத் தயாராகும் புதுப்படம் ஒன்றில் டிராஃபிக் ராமசாமியாகவே நடிக்கிறார். அவரிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து எஸ்.ஏ.சி கூறியதாவது : ”பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ரொளடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைபடுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பலமுறை டிராஃபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்றிருக்கிறது. அப்படி இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றுவரை போராடிக்கொண்டே தான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னைக் கவர்ந்தது. அதனால் தான் இந்தக் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் அவர்கள் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே என்னை வைத்து பலரும் பாராட்டிய நகைச்சுவையான ‘மார்க்’ என்ற குறும்படத்தை இயக்கியவர்” என்றார்.

இதைப்பற்றி இயக்குனர் விஜய் விக்ரம் கூறுகையில் ”இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் யதார்த்தமாவே அமைந்திருக்கிறது. இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி” என்றார்.

கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘டிராஃபிக் ராமசாமி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறதாம். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.

sa chandrasekarantraffic ramasamytraffic ramasamy bio pic
Comments (0)
Add Comment