பொன்ராம் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ஜனரஞ்சகமான படைப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளிவர உள்ளது.
தனது முந்தைய படங்களின் வசூல் சாதனையை தன்னுடைய அடுத்த படம் உடைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, புதுமையான விளம்பர யுத்திகளிலும் ஓவ்வொரு படத்திலும் புதிய யுத்தியை கையாளுவது என்பதில் பிடிவாதமாக இருப்பார். திரை உலகினரும், ரசிகர்களும் இவர் தன்னுடைய அடுத்த படத்துக்கு என்ன யுத்தி உபயோகிப்பார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பர். அந்த வகையில் “கரோக்கி பூத்” என்ற விளம்பர யுத்தியை கையாள உள்ளனர் சீமராஜா படக் குழுவினர்.
தியேட்டர்களில் அமைக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக பூத்துகளில் “சீம ராஜா” படத்தின் மியூசிக் ட்ராக், பாடல் வீடியோக்கள் எனப்படும் பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு டப்ஸ்மாஸ் செய்யலாம். இது யு-ட்யூப்பில் பதிவு செய்து வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் வாய்ப்பு கிட்டும்.
“இதற்கு “Sing along with seemaraja” என பெயரிட்டு இருக்கிறோம். விளம்பரங்கள் பொதுப்படையாக இருந்து விடக்கூடாது. தனி ஒரு ரசிகனை சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்தில் ஒரு ரசிகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். அதை நோக்கி எங்கள் முதல் படிதான் இந்த “கரோக்கி பூத்”.
நான் அறிந்த வரை இதுதான் தென்னிந்தியாவில் முதல் முறையாகும். பெரியவர்கள், குழந்தைகள் என்று இருவருக்கும் தனித்தனியே பூத்துகள் அமைத்து இருக்கிறோம். குழந்தைகள் பூத்துக்கு “சீமராஜா மினி கரோக்கி பூத்” என பெயரிட்டு இருக்கிறோம். மியூசிக் ட்ராக், பாடல் வீடியோக்கள், தவிர படத்தின் டீஸர் கூட இங்கு இருக்கும். பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் பாட்டு பாடலாம், அல்லது டீசருக்கு ஏற்றவாறு டப்ஸ்மாஸ் செய்யலாம்.
இந்த வீடியோ யு-ட்யூப்பில் பதிவு செய்யப்படும். இதில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். ஆரம்ப முயற்சியாக இன்று 25 ஆம் தேதி , மாலை 5 மணிக்கு, இசை அமைப்பாளர் டி இமான், இயக்குனர் பொன்ராம், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் சென்னை வடபழனி போரம் மாலில் உள்ள, பலாசோ தியேட்டர் வளாகத்தில் எங்கள் முதல் கரோக்கி பூத்தை அமைக்க உள்ளோம்.
பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு “கரோக்கி ஸ்டார்” ஆகலாம். உங்கள் எதிர்காலம் உங்கள் குரலில் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆர் டி ராஜா.