எல்லாரும் ஜோரா கை தட்டுங்க… : சரத்குமார் அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சிம்பு ரசிகர்கள்!

மாதானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்று நேற்று மாலையே தமிழகம் முழுக்க ஓட்டு வேட்டையாடக் கிளம்பி விட்டார்கள் விஷால் தலைமையிலான அணி.

அதற்கு முன்பாக 4 மணியளவில் பத்திரிகையாளர்களை அவசரமாக சந்தித்தார்கள் சரத்குமார் தலைமையிலான அணி.

ராதிகா, சிம்பு, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராக், மோகன் ராம், ஊர்வசி என ஆறு பேர் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களின் கூட்டத்துக்கு நடுவே சிம்புவின் ரசிகர்களும் கலந்திருந்தார்கள்.

முதலில் சங்க உறுப்பினர்கள் என்று எல்லா பத்திரிகையாளர்களும் நம்பிக்கொண்டிருக்க, இல்ல சார் நாங்க சிம்பு சாரோட ரசிகர்கள். திடீர்னு போன் பண்ணிக்கூப்பிட்டாங்க… என்றார்கள் வந்திருந்த ரசிகர்களில் சிலர் சிரித்துக் கொண்டே…

மற்றவர்கள் பேசும் போது கை தட்டாத அவர்கள் சிம்பு பேசும் போது மட்டும் அடிக்கடி கை தட்ட ஆரம்பித்தார்கள். இது வந்திருந்த நிருபர்களுக்கு எரிச்சலைத் தர சிம்பு ஒரு நிருபரிடம் நக்கலாகப் பேச அதற்கும் உற்சாகத்தில் கை தட்டினார்கள் சிம்பு ரசிகர்கள்.

அங்கு தான் ஆரம்பித்தது பிரச்சனை?

இதென்ன பத்திரிகையாளர் சந்திப்பா? இல்லென்னா ரசிகர்கள் சந்திப்பா? யாரு இவங்களை உள்ள விட்டது. முதல்ல ரசிகர்களை வெளியேத்துங்க என்று சக நிருபர்கள் சிலர் கோபத்தோடு சிம்புவை கண்டிக்க, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் பேச வந்ததை பேச ஆரம்பித்தார் சிம்பு.

ஆனால் நிருபர்கள் விடவில்லை, சிம்பு முதல்ல உங்க ரசிகர்களை வெளியேத்துங்க… அப்புறம் பேசுங்க என்றார். ஆனால் மீண்டும் மீண்டும் சிம்பு நிருபர்கள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பான நிருபர்கள் அப்போ நாங்க வெளியேறுகிறோம் என்று எழுந்து நிற்க, அப்போது குறுக்கிட்ட ராதிகா இப்ப என்ன உங்களுக்கு அவங்க கை தட்டக் கூடாது அவ்ளோ தானே…? சரி கை தட்ட மாட்டாங்க என்று சொன்னார்.

அதோடு அடுத்து சொன்னது தான் ஹைலைட் காமெடி.

இந்த கூட்டத்துக்கு நாங்க யாரையுமே கூட்டிட்டு வரல. அவங்களாகத்தான் வந்தாங்க. இது பொதுக்கூட்டம், யார் வேணும்னாலும் வரலாம், அவங்களை நாங்க தடுக்க முடியாது. என்றார்.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் சந்திப்பை பொதுக்கூட்டம் என்று சொன்னால் தெருக்களில் நடக்கும் கூட்டத்துக்கு என்ன பெயர்?

ராதிகாவுக்கே வெளிச்சம்.

அதோடு விஷால் அணியுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கத்தினர் முன் வந்திருப்பதை வரவேற்றுப் பேசத்தான் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சரத்குமார் அணியினர்.

சத்தமே இல்லாமல் அமைதியாக நடந்திருக்க வேண்டிய சந்திப்பு சிம்புவின் ரசிகர்களால் ‘சலசல’ப்பில் முடிந்தது.

SimbuSimbu Fans
Comments (0)
Add Comment