காதல் மட்டுமல்ல; தேசப்பற்றும் உண்டு : மகள் படத்தில் அர்ஜூன் செய்த மேஜிக்!

விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

அந்தப் படத்துக்குப் பிறகு எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தானே மகளை நாயகியாக்கி புதுப்படம் ஒன்றை தயாரித்து, இயக்கி வருகிறார் நடிகர் அர்ஜூன்.

தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் அர்ஜூன், எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு “சொல்லி விடவா” என்று டைட்டில் வைத்திருக்கிறார்.

தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எப்படியாவது இந்தப்படத்தின் மூலம் மகளை தமிழில் முன்னணி நடிகையாக்கி விட வேண்டும் என்கிற முனைப்போடு இப்படத்தை இயக்கி வரும் அர்ஜூன் இதை ஒரு காதல் படமாக மட்டுமில்லாமல் காதலோடு தனது அடையாளமான தேசப்பற்றையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறாராம்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தின் கதைக்களம் இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது.

இவர்களுடன் சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், “நான் கடவுள்” ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபு அகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஜெஸ்சி கிப்ட் இசை அமைக்க, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் கார்த்திக் பாடல்களை பாடியிருக்கிறார்கள். திரைப்படத்தொகுப்பு கே.கே.

மதன் கார்க்கி, விவேகா, பா. விஜய் ஆகியோர் பாடல்களை படைக்க, நடன பயிற்சியை சின்னி பிரகாஷும் கணேஷ் ஆசார்யாவும் கவனித்திருக்கிறார்கள்.

ஹெச் சி வேணுகோபால் ஒளிப்பதிவில் சென்னை, தர்மஸ்தலா, ஹைதராபாத், கேரளா மற்றும் வட இந்தியாவில் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Aishwarya ArjunChandan KumarSollividavaSollividava Movie News
Comments (0)
Add Comment