சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் சென்னை மக்களை ரொம்பவே பாதித்து விட்டது.
இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்ததும் சக மக்கள் தான். இனம், மொழி, சாதி, மதம் கடந்து மக்கள் செய்த இந்த பேருதவி சென்னை மக்களிடையே ஒரு நல் உறவை உறுதிப்படுத்தியது.
அதோடு மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாகவும் அமைந்தது.
அந்த மனித நேயத்தை பெருமைப் படுத்தும் விதமாக இந்த ஒற்றுமை என்றைக்கும் தொடர வேண்டும் என்பதை மக்களிடையே நினைவூட்ட நடிகர் விக்ரம் இயக்கியிருக்கும் ஆல்பம் தான் ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’.
ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஹரிஹரன் உள்ளிட்ட 29 முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர். மேலும், சூர்யா, பிரபுதேவா, நித்யாமேனன், நயன்தாரா, கார்த்தி, சார்மி, மும்தாஜ், பாபி சிம்ஹா உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும், நிவின் பாலி, பிரித்விராஜ் அபிஷேக் பச்சன் பிற மாநிலத்தை சேர்ந்த நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இன்று வெளியாகும் இதன் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பேசிய விக்ரம்
“மழை வெள்ளம் முடிந்த பின் ஒரு நாள் சென்று கொண்டிருந்த போது ஒருவர் என் மீது லேசாக மோதி விட்டார். அப்போது அவர் என்னைப் பார்த்த ஒரு பார்வைதான் இப்படி ஒரு இசை குறும்படத்தை வெளியிடத் தூண்டியது.
உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை.
சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த மழை. இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல, மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.
வெள்ளத்தினைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது. வெள்ளத்திற்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள்.
சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.
எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக, நான் பார்த்தேன்.
மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. என்னை நான் இன்னும் சற்று மெருகேற்றிக் கொள்ளக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி, மேலும் இந்த ஆல்பத்தில் பங்களித்த அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் நன்றி ” என்றார் விக்ரம்.