சினிமாவுக்கு நாங்கள் எதிரி அல்ல : குறும்பட விழாவில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

தநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ”இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும் மோதல் நடந்த காலத்தில் ரஜினிக்கும், அன்புமணிக்கும் பாலமாக இருந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பெரிய இடத்து பிள்ளை என்றாலும் குணாநிதிக்கு தொழிலில் இருக்கும் டெடிகேஷன் பாராட்டுக்குரியது. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்த குறும்படத்தை போட்டுக் காட்ட நான் முயற்சி செய்வேன். ஆளவந்தான் போல ஒரு படைப்பை கொடுத்த கமல்ஹாசன் இந்த குறும்படத்தை பற்றி கணித்திருப்பது உண்மை. இந்த குழுவினர் என் நிறுவனத்திற்கு ஒரு படத்தை செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் பல வித கதைகள், தமிழ் சினிமா கதை சொல்லலில் சாத்தியமில்லை. வணிக நோக்கத்தில் படங்கள் எடுக்கப்படுவதால், நேரடியாக நாங்கள் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படங்களில் சொல்ல முடியும். அந்த வகையில் மிகவும் டெடிகேஷனோடு இந்த குறும்படத்தை குணாநிதி மற்றும் குழுவினர் எடுத்திருக்கிறார்கள். இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் இந்த படத்தை நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டும். அன்புமணி சார் தர்மதுரை படத்தை பார்த்து விட்டு பாராட்டினார், நல்ல சினிமாவை எப்போதும் ஆதரிப்பவர் அவர் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

குணாநிதியை குழந்தையில் இருந்தே எனக்கு தெரியும். ஐந்து வயதில் லட்சக்கணக்கான மக்கள் முன் மேடை ஏறியவன் குணாநிதி. அவன் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞன். மருத்துவம் படித்து விட்டு வந்தாலும் கலையில் தான் அவனுக்கு ஆர்வம். ஒட்டு மொத்த குடும்பத்தையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிரிக்க வைக்கும் திறமையானவன். இந்த குறும்படத்தில் புகை புடிக்கும் காட்சியை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் புகை பிடிப்பதை உயர்த்தி சொல்லவில்லை என்பது ஆறுதல்.

சினிமாவுக்கு நாங்கள் எதிரி என்பது போல சித்தரித்து விட்டார்கள். அப்படி கிடையாது, நான் வாரம் ஒரு படம் பார்ப்பேன், அப்பா மாதம் ஒரு படம் பார்ப்பார். என் குழந்தைகள் வாரம் இரண்டு மூன்று படம் பார்ப்பவர்கள். சினிமா தான் தமிழர்களுக்கு வாழ்க்கை. அதனால் பொறுப்பான படங்களாக கொடுக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். சினிமாவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்றார் அன்புமணி ராமதாஸ்.

ட்ரெண்ட்லௌட் சிதம்பரம், நாயகன் குணாநிதி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பதநிச தயாரிப்பாளர் சங்கமித்ரா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Anbumani RamadossStroke of DissonanceStroke of Dissonance Short Film Launch
Comments (0)
Add Comment