இளைஞர்களும், பெண்களும் சமூகவலைத்தளங்கள் மூலமாக ஒன்றிணைந்து நேற்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் குதித்தார்கள். அது இன்றும் தமிழகம் முழுக்க விரிவடைந்து பரவலாக நடைபெற்று வருகிறது.
அறவழியில் தன்னெழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் சிம்பு, இயக்குநர்கள் கெளதமன், அமீர், ஆர்யா, சினேகன், டி.ராஜேந்தர், மயில்சாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரானவர் என்று சொல்லப்பட்டு வந்த விஷால் கூட நான் என்றுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தன்னிச்சையாக நடக்கும் எந்த ஒரு அறப்போராட்டமும் முழுமையான வெற்றியைப் பெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது :
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது. ‘ஜல்லிக்கட்டு’ நடத்த தடை வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்று கூடி போராடத் தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.
’தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ‘ஜல்லிக்கட்டு’ மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.
‘நாட்டு மாடு இனம்’ அழிவதற்கு துணை போகிறவர்கள் ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நம் கண்களை குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது.
அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கை கோர்க்கிறேன். மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகி விடக்கூடாது.
நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம்.
இவ்வாறு சூர்யா தெரிவித்திருக்கிறார்.