படம் எடுத்து முடிப்பதை விட அதை சென்சாருக்கு அனுப்பி படைப்புக்குரிய சரியான சான்றிதழை வாங்குவதற்குள் தயாரிப்பாளரும், இயக்குநரும் படும்பாடு சொல்லி மாளாது.
சினிமாவைப் பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் நிரம்பியிருக்கும் இந்த சென்சார் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் என்ன சான்றிதழ் தருகிறார்களோ? அதுதான் படத்தின் சான்றிதழ் என்கிற சென்சார் போர்டின் அதிகார திமிரை நேற்று முதல் போஸ்டர்களில் அம்பலத்தி வருகிறது ‘தரமணி’ படக்குழு.
ராம் இயக்கியிருக்கும் இந்த தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? படத்தில் பெண் மது அருந்துவது போல காட்சிகள் உள்ளதாம்.
இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்து விட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, ‘நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா… ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன் தான் என்பேன்,” என்று பாராட்டினார்.
ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மது அருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி படத்துக்கு ஏ சான்று வழங்கியுள்ளனர். ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு ‘யு’ அல்லது அதிகபட்சம் ‘யு/ஏ’ தான் வழங்குகின்றனர். இதைக் குறிப்பிட்டுதான் இன்று போஸ்டரில் ‘ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் ‘யு/ஏ’ பெண் ‘ரா’வாக அருந்தினால் ‘ஏ’ ஆக தரமணி ‘ஏ’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இரு தேசிய விருதுகள் பெற்ற ஜேஎஸ்கே சதீஷ்குமார் தனது ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியாகிறது!