படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…,

எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது, ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார். இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் மே 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

#TheeraKaadhal

Actor JaiActress Aishwarya Rajeshdirector Rohin VenkatesanTheeraKaadhal movie