‘தோழா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தங்களது திரைப்படப் பயணத்தில் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்து கொண்டனர் ‘எவர் க்ரீன் ஹீரோ’ நாகார்ஜூனா, மற்றும் ‘ஜூனியர் மார்க்கண்டேயன்’ கார்த்தி.
”என்னுடைய சினிமா கேரியர்ல ‘தோழா’ படம் ஒரு மைல்கல் படமாக இருக்கும்னு சொல்லல. ஆனால் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம். சமீபத்துல ‘InTouchables” ஒரு ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன்.
இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை ஏன் இங்கே ரீமேக் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் ‘InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த மாதிரியான ஒரு உணர்வை ‘தோழா’ படம் நிச்சயம் கொடுக்கும்.
இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விரும்பமில்ல. நான் நடிக்கக்கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இந்தப் படத்துல நான் வீல் சேர்ல உட்கார்ந்தபடி நடிக்கிற காட்சிகள் இருக்கு. என் பசங்களாலயும், மனைவியாலும் என்னை அப்படியொரு சூழ்நிலையில நடிக்கிறத ஏத்துக்கவே முடியல. இதுதான் அவங்க என்னை நடிக்க வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். அதனால ‘தோழா’வை பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என எமோஷனல் பஞ்ச் வைத்தார் நாகார்ஜூனா.
அடுத்து பேசிய கார்த்தி, “ஒரு நல்லப்படம் நடிக்கணும்னு நமக்கு ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பு தான் ‘தோழா’. உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதையில நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ணமுடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்”.
என் கூட ரொம்ப நாளைக்கப்புறம் தமன்னா ஜோடி சேர்ந்து நடிச்சிருக்காங்க, அவங்களை தென்னிந்திய நடிகையாக நடிக்க வைக்க முந்தின படங்கள்ல கஷ்டப்பட வேண்டியிருந்துச்சு. ஆனா இதுல ஒரு வெளிநாட்டு பொண்ணா நடிக்க வைக்க ரொம்ப ஈஸியா இருந்துச்சு. அதோட அவங்ககிட்ட நடிப்பு உட்பட எல்லா விஷயங்களிலும் நல்ல மெச்சூரிட்டி தெரியுது. அவங்களுக்கும் இந்தப்படம் ஒரு நல்ல படமா தமிழ்ல அமையும்.
நல்லா சம்பாதிச்சி எல்லாத்தையும் இழந்து நிக்கிற ஒருத்தர், இனிமேல் தான் சம்பாதிக்கப் போகிற துடிப்போட இருக்கிற ஒருத்தன் இவங்க ரெண்டு பேருக்கும் அவங்க ஆசைப்பட்டது மட்டும் கெடைச்சா போதுமா? அதைத் தாண்டிய வாழ்க்கையைச் சொல்கிற படம் தான் இந்த ‘தோழா’. என்றவர் என்னோட கேரியர்ல கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாக இருக்கும், அது உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும் என்றார்.