பகல் கொள்ளையைக் கேள்விப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை நேரில் பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்தில் இருக்கிற அத்தனை தியேட்டர்களுக்கும் ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம்.
100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். விக்கினால் அவசரத்துக்குக் குடிக்க தண்ணீர் கூட வைக்க மாட்டார்கள். 200 பேர் படம் பார்க்க வந்தால் 60 பேர் தான் வந்தார்கள் என்று படம் ஓடும் தியேட்டருக்கு விசிட் வரும் தயாரிப்பாளரும், இயக்குநரும் இருக்கின்ற காட்சியிலேயே ரசிகர்களின் கணக்கில் பொய் சொல்லுவார்கள். இன்னும் சில திரையரங்குகளோ தங்களுடைய டிக்கெட் கவுண்டர்களிலேயே பிளாக் டிக்கெட் ரேட்டில் ரசிகர்களிடம் டிக்கெட்டுகளை விற்பார்கள்.
தியேட்டர் உரிமையாளர்கள் அடிக்கும் பார்க்கிங், பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் என அடிக்கிற கட்டணக் கொள்ளை கணக்கில் அடங்காதவை, மன்னிக்க முடியாதவை.
இப்படி இதுவரை எதேச்சதிகாரப் போக்கோடு நடந்து கொண்ட தியேட்டர் உரிமையாளர்களின் கழுத்துக்கு கத்தி வைத்தாற் போல் ஆகி விட்டது ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசின் உள்ளூர் வரியும்!
வரி அறிவிப்பு வந்த உடனே அந்த வாரம் ரிலீசான ”இவன் தந்திரன்”, ”அதாகப்பட்டது மகாஜனங்களே” படங்களின் வசூல் பாதிப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வேலை நிறுத்தம் செய்தார்கள். கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் மூடப்பட்ட தியேட்டர்களால் சுமார் 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் தங்களுக்கும் கணிசமாக வரி இழப்பு ஏற்பட்டாலும் தியேட்டர் உரிமையாளர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை தமிழக அரசு.
திரையுலகைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட பல கட்ட பேச்சு வார்த்தையில் ”ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்கள் ரிலீசான போது வசூலித்த டிக்கெட் கட்டணம்”; ”10 ரூபாய் பாப்கார்ன் பாக்கெட்டை 80 ரூபாய்க்கு விற்பனை செய்தது” போன்ற அரசு கேட்ட பல கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பி வந்திருக்கிறது தியேட்டர் குழு. அதனால் தான் எந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளூர் வரியை ரத்து செய்ய முடியாது என்பதில் உறுதியாகவும், இரங்கி வராமலும் இருந்திருக்கிறது அரசாங்கத் தரப்பு.
வேண்டுமானால் ஒரு குழு அமைத்து முடிவெடுக்கலாம் என்று அரசு சொன்னதையடுத்து இதற்கு மேல் வேலை நிறுத்தம் செய்தால் நமக்குத்தான் பெருத்த நஷ்டம் என்று உணர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.
நாளைமுதல் தமிழக தியேட்டர்களில் அபிராமி ராமநாதன் சொல்வதை போல ரூ.120 டிக்கெட் விலையின் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரியையும் சேர்த்தால் ரூ153.60 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதோடு தமிழக அரசின் கேளிக்கை வரியும் விரைவில் சேரும் என்பதால் இனி ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவது பெருமளவு குறையும் என்பது உறுதி.
ஏற்கனவே ”இணையதளம் மூலமாக புதிய படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கவும்”, ”ஒரு மாசத்துக்குள்ள டிவியில போட்டுடுவான்” என்று வீட்டு சின்னத்திரையிலேயே பார்க்க பழக்கப்பட்டு விட்ட ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைக்க வேண்டுமென்றால் பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ், குடிநீர் பாட்டில்களின் அநியாய விலைகளைக் குறைத்தால் மட்டுமே சாத்தியம்.
இல்லையென்றால் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கல்யாண மண்பங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் நிலை தான் மிஞ்சியிருக்கிற தியேட்டர்களுக்கும் ஏற்படும்!