‘சாக்லேட்’, ‘மதுர’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மாதேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை தனது பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அதிக பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் லட்சுமண்.
ஜூலை 27-ம் தேதி ரிலீசாகப் போகும் இப்படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் மாதேஷ் ”த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்து விட்டு அழகாக சென்றிருக்கலாம்.
ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம்.
இப்படத்தின் வி எப் எக்ஸ் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து த்ரிஷாவை மேடைக்கு பேச அழைத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவருக்கு பத்திரிகையாளர்களில் சிலர் திடீர் பட்டம் ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து ‘தமிழ்சினிமாவின் மார்க்கண்டேயி’ என்று பட்டம் சூட்டி பேச அழைத்தார்.
தன்னைத் தேடி வந்த திடீர் பட்டத்துக்கு கை கூப்பி நன்றி தெரிவித்து த்ரிஷா பேசியதாவது, ”தினமும் காலை எழுந்து செய்தித்தாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிய செய்திகள் தான் அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும்.
‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது” என்றார்.